“மாவீரர் தினக் கொண்டாட்டம் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கிறது” – சரத் வீரசேகர விமர்சனம்

தமிழீழ விடுதலைப் புலிகள் ‘வீரர்கள்’ போல கொண்டாடப்படுவதை அரசாங்கம் அனுமதிப்பது அதன் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.
“நேற்றும் இன்றும் மாவீரர் தினம் என்ற பெயரில் ஒரு நிகழ்வைக் கண்டோம். பிரதேசங்கள் முழுவதும் சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகள், விடுதலைப் புலிகளின் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு, விடுதலைப் புலிகளின் பாடல்களுடன் பாரிய நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் பிறந்த நாளில், நாட்டின் பிரிவினைக்காக, தனிநாடு கோரியவர்களை ‘வீரர்கள்’ போல கொண்டாடுவதற்கு இடமளிப்பது அரசாங்கத்தின் கோழைத்தனத்தை வெளிப்படுத்துகிறது.
ஒரு போரில் வெற்றி பெற்ற அரசாங்கம், அந்த பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்க ஒருபோதும் வாய்ப்பு கொடுக்கக்கூடாது.
ஆனால், இந்த அரசாங்கம் அந்தப் பொறுப்பிலிருந்து முழுமையாக விலகிவிட்டது என்றும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
எந்தத் தாயும் தனது பிள்ளைப் பயங்கரவாதியாகவோ அல்லது குற்றவாளியாகவோ இருந்தாலும், வீட்டில் ஒரு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தலாம்.
அதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், குழுவாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட வகையிலும் இதுபோன்ற கொண்டாட்டங்களை நடத்துவது பிரிவினைவாதத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் உயிர் கொடுப்பதற்கும் சமமாகும் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.