மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்யாவிட்டால், எதிர்வரும் நாட்களில் இது தொடர்பில் சர்வதேச சமூகத்தை நாட வேண்டியிருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அதன்படி, மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இடம்பெறாவிட்டால், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் இவ்விடயத்தை தெரிவிக்க வேண்டியிருக்கும் என்றும் எஸ்.எம்.மரிக்கார் குறிப்பிட்டுள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
“தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திலேயே நூற்றுக்கும் அதிகமான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் பிரதிநிதிகள், தனது கடமையை செய்யும் நேரத்தில் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பே இங்கு கேள்விக்குறியாக இருக்கும் போது, நாட்டில் பொது மக்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் சந்தேகங்கள் எழுகின்றன. வெலிகம தவிசாளர் கொலை செய்யப்பட்டு சிறிது நேரத்திலேயே அவருக்கு பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகள் இருந்ததாக அரசாங்கம் அறிவித்தது.
இவ்வாறான காரணங்களை காட்டி, அரசாங்கம் மக்கள் பிரதிநிதிகளுக்கான பாதுகாப்பை மறுத்து வருகிறது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். ஒரு கட்சியாக போதை ஒழிப்பு மற்றும் பாதாள உலகக் குழுக்களை ஒழிக்கும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு நாம் ஆதரவு தெரிவித்தாலும் கூட இவ்வாறான பொறுப்பற்ற விடயங்களையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, மக்கள் பிரதிநிதிகளுக்கான பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்யாவிடின், இது தொடர்பில் சர்வதேசத்துக்கு அறிவிக்கவும் ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.



