பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு, தொழில் அமைச்சு மற்றும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கிடையில் இன்று வெள்ளிக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவால் சமர்ப்பிக்கப்பட்ட 2026 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச மற்றும் தனியார் துறையினரின் சம்பள அதிகரிப்புக்கு இணையாக, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தையும் 1,700 ரூபா வரை அதிகரிக்க முன்மொழியப்பட்டது.
அந்த முன்மொழிவுக்கு அமைவாக, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், தொழில் அமைச்சர் அனில் ஜயந்த மற்றும் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட குழுவினர், பிராந்திய தோட்ட நிறுவனங்களுடன் சம்பள உயர்வு தொடர்பாக பல சுற்று விரிவான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தனர்.
அதற்கமைய 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது, ஜனாதிபதி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1,750 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனக் குறிப்பிட்டிருந்தார். இதில் அடிப்படைச் சம்பளம் 1,350 ரூபாவிலிருந்து 1,550 ரூபா வரை 200 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், வருகை ஊக்குவிப்பு கொடுப்பனவாக 200 ரூபாவை அரசாங்கம் வழங்கத் தீர்மானித்துள்ளது. இதற்காக 2026 வரவு செலவுத் திட்டத்தில் 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது
இதன் மூலம், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,350 ரூபாவிலிருந்து 1,750 ரூபா வரை 400 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அவர்களுக்கு சிறந்த பொருளாதாரத்தை வழங்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பெருந்தோட்ட சமூகத்தினர் இலங்கைக்கு வருகை தந்து கடந்த 200 வருட காலப்பகுதியில் வழங்கப்பட்ட மிக உயர்ந்த சம்பள உயர்வு இதுவாகும் என பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சம்பள அதிகரிப்பிற்கு அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமையவே சம்பளம் வழங்குவது தொடர்பாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு, தொழில் அமைச்சு ஆகியன இணைந்து பிராந்திய தோட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளன. இந்நிகழ்வு இன்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் நடைபெறவுள்ளது.



