சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையை முறையாக பயன்படுத்துமாறு சஜித் வலியுறுத்தல்

சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையை பயன்படுத்தி, மனித உரிமை மீறல்கள் அல்லது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று அரசாங்கத்திடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

உதய கம்மன்பில தலைமை வகிக்கும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர்களுடன், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (04) நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், சமூகத்தில் அமைதி மற்றும் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காகவே சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. எனினும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு பதிலாக தனிநபரின் மனித உரிமைகளை மீறுவதற்கு இந்த உடன்படிக்கை பயன்படுத்தப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையை பயன்படுத்தி மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் எதிர்கட்சி தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.