ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் இரத்தாகும் SVAT நமது நாட்டின் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். SVAT வசதியை இரத்துச் செய்யும் நடவடிக்கையை கைவிடுமாறும், நமது நாட்டின் ஏற்றுமதித் துறைக்கு நன்மை பயக்கும் என்பதால், இது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைக்கு செல்லுமாறும் சர்வதேச நாணய நிதியக்குழுவிடம் சுட்டிக்காட்டினோம் என ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (02) சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகள் சர்வதேச நாணய நிதியக்குழுவினரோடு விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டோம். ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் இரத்தாகும் SVAT நமது நாட்டின் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். SVAT வசதியை இரத்துச் செய்யும் நடவடிக்கையை கைவிடுமாறும், நமது நாட்டின் ஏற்றுமதித் துறைக்கு நன்மை பயக்கும் என்பதால், இது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைக்கு செல்லுமாறும் சுட்டிக்காட்டினோம். நமது நாட்டின் ஏற்றுமதியாளர்களுக்கு SVAT வசதி இரத்துச் செய்யப்பட்டதன் பின்னர், அரசாங்கம் ஒரு மாற்றுத் திட்டத்தை முன்வைக்கவோ முன்மொழியவோ இல்லை என்று IMF பிரதிநிதிகளிடம் நாம் சுட்டிக்காட்டினோம்.
வறுமையை இல்லாதொழிக்க, ஒருங்கிணைந்த புதியதொரு வேலைத்திட்டம் அவசியமாகும்.
நாட்டில் கணப்படும் வறுமைக்கு தீர்வானது நிலைபேறான ஒன்றாக முன்னெடுக்கப்படவில்லை. அஸ்வெசும திட்டத்தின் மூலம் நுகர்வு சார் தேவைப்பாட்டை பூர்த்தி செய்து கொள்ள ஓரளவு பக்க பலமளிக்கப்பட்டாலும், முதலீடு, சேமிப்பு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகிய துறைகளை உள்ளடக்கிய வறுமை இல்லாதொழிப்பதற்கான திட்டமொன்று இல்லாததால், நாட்டின் 50% ஆனோர் ஏழ்மை நிலைக்கு வந்துள்ளனர் என ஆய்வுகள் மூலம் வெளிக்கொணரப்பட்டுள்ள விடயங்களை IMF பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினோம். இந்த மோசமான நிலையை எடுத்துக்காட்டி, வறுமையை இல்லாதொழிக்க, ஒருங்கிணைந்த புதியதொரு வேலைத்திட்டம் அவசியமாகும் என்பதை இதன்போது சுட்டிக்காட்டினோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பராட்டே சட்டத்தால் பாதிக்கப்பட்ட நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் உரிமையாளர்களை நாம் பாதுகாக்க வேண்டும்.
நாட்டின் பொருளாதாரத்திற்கும், தொழில்வாய்ப்புகளுக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைப் பெற்றுத் தரும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் உரிமையாளர்கள் மீது, பராட்டே சட்டத்தை அமுல்படுத்துவது அவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று சுட்டிக்காட்டினோம். பராட்டே சட்டம் அமுல்படுத்தப்படுவது பல சந்தர்ப்பங்களில் இடைநிறுத்தப்பட்டாலும், அதனோடினைந்த, அவர்களினது கடன் மறுசீரமைப்பு, கடன் மற்றும் வட்டி தள்ளுபடி போன்ற திட்டங்களை முன்னெடுக்காமையால், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் உரிமையாளர்கள் உதவியற்று காணப்படுகின்றனர் என்று சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினோம்.
IMF செயல்முறை ஊடாக நாட்டு மக்கள் ஏராளமான சமூகப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில், மக்களுக்கு நிவாரணம் மற்றும் பக்க பலத்தை பெற்றுக் கொடுக்க, தற்போது இணக்கப்பாடு காணப்பட்ட விடயங்களில் மேலும் முன்னேற்றம் கண்ட, மக்களுக்கு சாதகமான IMF இணக்கப்பாடொன்றின் அவசியத்தையும் நாம் இவ்வாறு பல விடயங்களை அவர்கள் மத்தியில் முன்வைத்து சுட்டிக்காட்டினோம்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.