எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் Andreas Motzfeldt Kravik ஆகியோருக்கு இடையேயான விசேட சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை (3) நடைபெற்றது. இதில் இலங்கைக்கும் நோர்வேக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான தொலைநோக்கு மூலோபாயம் முன்வைக்கப்பட்டன.
டித்வா சூறாவளியின் பின்னர் CERF, WFP மற்றும் செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட பன்னாட்டு பங்காளர்கள் மூலம் நோர்வே பெற்றுத் தந்த NOK மில்லியன் 24 மதிப்பிலான உடனடி மனிதாபிமான உதவி மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் நோர்வே அரசு வழங்கிய ஒத்துழைப்பை எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மிகவும் பாராட்டிப் பேசினார்.
பசுமை தொழில்மயமாக்கலில் இலங்கையின் ஆர்வத்தை முன்னிலைப்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உலக வங்கியின் 150 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள ஆற்றல் திட்டத்தை எடுத்துக்காட்டி, மிதக்கும் சூரிய ஆற்றல் நிலையங்கள் மற்றும் காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் நோர்வேயின் விசேட நிபுணத்துவத்தை பெற்றுத் தருமாறு அழைப்பு விடுத்தார்.
புதைபடிவ எரிபொருளில் சார்புநிலையை குறைப்பது சுற்றுச்சூழல் முன்னுரிமையாகவும் கட்டமைப்பு ரீதியான பொருளாதார அவசியத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
நீலப் பொருளாதார ஒத்துழைப்பை விரிவாக்குதல், கடல்சார் ஆளுகையைப் வலுப்படுத்துதல் மற்றும் மீன்பிடி, கடல்சார் பாதுகாப்பு, நிலையான துறைமுக அபிவிருத்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டன.
2028 இறையாண்மைப் பத்திரக் கடன் இலக்குகளை எட்டுவதற்கான நிறுவன ரீதியிலான சீர்திருத்தங்களின் அவசியத்தையும் எதிர்கட்சித் தலைவர் இங்கு வலியுறுத்தினார்.
வரி நவீனமயமாக்கல், உள்நாட்டு வளங்களை முன்னோக்கி மேம்படுத்துதல் மற்றும் ஊழல் எதிர்ப்பு கட்டமைப்புகளில் தொழில்நுட்ப ஒத்துழைப்பையும் சஜித் இங்கு எதிர்பார்த்தார்.
இலங்கையின் எதிர்காலத்தின் அடிப்படை தூண்களாக ஜனநாயக ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்துக்கான அர்ப்பணிப்பை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் எடுத்துரைத்தார். அவ்வாறே, மத்திய கிழக்கில் உக்கிரமடைந்து வரும் மோதல் நிலைமை மற்றும் அதன் பரந்த பொருளாதார மற்றும் புவி-அரசியல் தாக்கங்கள் உள்ளிட்ட உலக நிகழ்வுகள் குறித்த கருத்துப் பரிமாற்றத்துடன் இச்சந்திப்பு நிறைவுக்கு வந்தது.


