சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம்: 6 பேருக்கு விளக்கமறியல்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் இன்று (06) கைதான 2 பேரும் நேற்று (05) கைதான 4 பேருமாக 6 மாணவர்களும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்றைய தினம் பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புஸ்ஸல்லாவை – இஹலகம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவன் கடந்த 29 ஆம் திகதி உயிரை மாய்த்துக்கொண்டார்.

பகிடிவதைக்கு உள்ளானதை அடுத்து அந்த மாணவன் உயிரை மாய்த்துக்கொண்டதாக அவரது தரப்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் பதில் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதற்கமைய, இந்த சம்பவம் தொடர்பாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டில் பயின்றுவரும் நான்கு மாணவர்கள், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்னதாக கைது செய்யப்பட்டிருந்தனர்.

இன்றைய தினமும் இரண்டு மாணவர்கள் குற்;றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டனர்.
இதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட அனைத்து மாணவர்களும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.