ஒற்றையாட்சியால் ஒடுக்கப்பட்ட ஈழத்தமிழர் இறைமையை ஒருமித்த ஆட்சி மேலும் ஒடுக்காதிருக்க வழிவரைபு தேவை | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 362

‘வேறுபாடுகள் உடன்பாடின்மைகள் பிரிவினையாக இருக்க வேண்டியதில்லை’ என்று 16ம் நூற்றாண்டிற்குப் பின் நீண்ட நானூறு ஆண்டுகள் இடைவெளியைக் கடந்து அங்கிலிக்கன் திருச்சபையின் தலைவரான பிரித்தானிய அரசர் மேதகு 3வது சாள்ஸ் அவர்களும் அரசி கமிலா அவர்களும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தை 14வது லியோ  அவர்களின் வத்திக்கான் நகருக்கு இரண்டு நாட்கள் அரசமுறைப் பயணத்தை மேற்கொண்டு திருத்தந்தை 14வது லியோ அவர்களுடன் கூட்டுத்திருப்பலி வழிபாட்டில் கலந்து கொண்ட வரலாற்று மாற்றம் கடந்த வாரத்தில் இடம்பெற்றுள்ளது. ஈழத்தமிழர்கள் இதனை முன்மாதிரியாகக் கொண்டு வேறுபாடுகள் உடன்பாடின்மைகளை பிரிவினையாக வளர்க்கும் தங்களின் இன்றைய நிலையை மாற்ற வேண்டும் என்பது இலக்கின் இவ்வார எண்ணமாகவுள்ளது.
பிரித்தானியப் பிரதமர் கியர் ஸ்ராமர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து வேலை செய்வதற்கான வழியை உருவாக்க உக்ரேன் போரை மையப்படுத்தி அவரவர் தங்கள் தங்கள் தனித்துவத்துடன் “விருப்பமொன்றில் ஒன்றிணைதல்” என்னும் செயலணி முறைமையொன்றை உருவாக்கி கடந்த வாரத்திலும் செலன்ஸ்கிக்கு அமெரிக்க அதிநவீன ஏவுகணைகளை வழங்கவென ஐரோப்பிய ஒன்றியத்தையும் அழுத்தம் கொடுக்க வைப்பதற்கான உச்சி மாநாடொன்றை செலன்ஸ்கியுடன் நம்பர் 10 டவுணிங் ஸ்ரீட்டில் நடாத்தியுள்ளார். இது வேறுபாடுகள் உடன்பாடின்மைகள் இருப்பினும் குறித்த ஒரு இலக்கை அடைய ஒருமைப்பாட்டுடன் வேலைசெய்வதற்கான புதிய முறையியலாக மாறியுள்ளது.
ஈழத்தமிழர்களும் இவ்வாறு ஏன் தங்கள் தங்கள் தனித்துவங்களுடன் ஒரு இலக்கை அடைவதற்கு விருப்பொன்றில் இணைதல் என்ற உத்தியை ஏன் பயன்படுத்தக் கூடாதென்பதே இலக்கின் இவ்வாரக் கேள்வியாக உள்ளது.
இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இன்று வரை தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வரலாற்றுத் தாயகத்தில் வாழ்ந்து வரும் உலகின் சிறுதேச இனமான ஈழத்தமிழினம் தனது பிரிக்கப்பட முடியாத அடிப்படை மனித உரிமையாகிய தன்னாட்சி உரிமையைப் பயன்படுத்தி தங்கள் அரசியல் எதிர்காலத்தை அமைக்கும் தேசநிர்மாணப் பணிக்கு தம்மிடையே ஒருமைப்பாட்டை வேகமாகக் கட்டியெழுப்புவதற்கான வழிவரைபை (Road Map) அமைக்க வேண்டிய தேவையை கடந்த வாரத்தில் இலக்கின் சிந்தனைக்கான பதிவாக ஒரு அன்பர் பதிவிட்டிருந்தார்.
இவருடைய இந்தப்பதிவு அக்டோபர் மாதத்தில் வந்தமை அக்டோபர் மாதமே ஈழத்தமிழர் இறைமை ஒடுக்க மாதமாக வரலாற்றில் விளங்கும் நிலையில் இறைமையை மீளுறுதி செய்வதற்கான வழிவரைபு குறித்து சிந்தனை விழிப்புணர்வை தந்துள்ளதாகவே இலக்கு கருதுகிறது.  ஆம்! அக்டோபர் மாதம் உலக வரலாற்றில் ரஸ்யாவின்   அக்டோபர் புரட்சியை நினைவேந்தி நிற்பது போல ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அக்டோபர் மாதம் ஈழத்தமிழர் இறைமை ஒடுக்க மாதமாகவே உலக வரலாற்றில் நினைவாகிறது. 1832 அக்டோபர் 31 அன்று தான் ஈழத்தமிழர்களின் 1505 முதல் 1832 வரையான 327 ஆண்டுகால தங்களின் இறைமையைக் காப்பதற்கான போராட்டம் வன்னியில் கற்சிலைமடுவில் பண்டாரவன்னியனின் ஆட்சி பிரித்தானிய காலனித்துவத்தால் கைப்பற்றப்பட்டதுடன் வீழச்சியடைந்தது. 1945 அக்டோபர் 7ம் நாள் பிரித்தானிய வெஸ்ட் மினிஸ்டர் பாராளுமன்றத்தில் சோல்பரி அரசியலமைப்பை தாக்கல் செய்து ஈழத்தமிழர்களின் இறைமையைச் சிங்களவர்களின் இறைமையுடன் ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறைமைக்குள் ஈழத்தமிழரின் விருப்புப் பெறப்படாது இணைத்து ஈழத்தமிழர்களின் இறைமை ஒடுக்கத்தை ஏற்படுத்தினர். அன்று முதல் இன்று வரை 80 ஆண்டுகள் சிங்களப் பாராளுமன்ற கொடுங்கோன்மை ஆட்சியில் இனஅழிப்பை இனத்துடைப்பை பண்பாட்டு இனஅழிப்பையே வாழ்வாக  எதிர்கொண்டு அதனை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.
இந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒற்றையாட்சியால் ஏற்படுத்தப்ட்ட ஈழத்தமிழர் இறைமை ஒடுக்கத்தை ஒருமித்த ஆட்சியாக ஈழத்தமிழர்களை ஏற்க வைக்கும் முயற்சிகள் வேகம் பெறுவதை தாயக ஊடகச் செய்திகள் வெளிப்படுத்தியுள்ளன. அநுர அரசின் புதிய அரசியலமைப்புத் திட்ட வரைபுக்குள் ஏக்கிய இராஜ்ஜிய என்ற சிங்களச் சொல்லே சிங்கள இறைமையை மட்டும் உறுதிப்படுத்த கையாளப்படக்கூடும் என்கின்ற கருத்து பரவலாக உள்ளது. இதன்  சரியான தமிழ் மொழிபெயர்ப்பு ஓரே அரசு என்பதாகத்தான் அமைய முடியும். ஆனால் அதனை  ‘ஒருமித்த ஆட்சி’  என்று மொழிபெயர்த்து  மகிந்த கோத்தபாய ரணில் சிந்தனைகளின் தொடர்ச்சியான ஒரு நாடு சிங்கள நாடு – ஒரு சட்டம் பௌத்த சட்டம் என்பதனை உறுதிப்படுத்தும் முறையில் புதிய அரசியல் அமைப்பில் அதனை இடம்பெற வைப்பதற்கு ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் தங்களின் சட்ட அறிவு கொண்டு பலவிளக்கங்கள் அளித்து வருகின்றனர்.  உண்மையில் ஒற்றையாட்சி என்பது நடைபெறும் ஆட்சி ஒற்றையானது என்பதையே குறிக்கும். ஆனால் ஒருமித்த நாடு என்பது சிங்களநாடு என்பதில் ஒருமித்துப்போதலை அதாவது சிங்கள நாட்டுக்குள் தன்னாட்சி உள்ள தேச இனமாக அல்ல வெறும் குடியேற்ற சமுகமாக அடங்கி போவதைக் குறிக்கும்.
இந்த ஒருமித்த அரசில் ஈழத்தமிழர் மாண்டுவிடாது தடுக்க உலக இனமாகவுள்ள ஈழத்தமிழர் தங்களின் உலகளாவிய ஈழத்தமிழ் இளையோர், ஈழத்தமிழ்த்  தகவல் சமுதாயம், மதி வளச் சமுதாயம், நிதிவளச் சமுதாயம், குடிசார் அமைப்புக்கள் என்னும் ஐந்து தளங்களையும் ஈழத்தமிழர்களின் அறியாமையையும் வறுமையையும் நீக்க வல்ல செயல்அணிகளாக ஆளணிகளாக மாற்றுவதே சிறந்த வழிவரைபாகும் என்பது இலக்கின் விளக்கமாகவுள்ளது.  இதற்கான சிந்தனைக் கலந்துரையாடல்களே புதிய விடியலைத் தரும். அதற்கு ஒளி ஊட்டக்கூடியது ஒன்றுபட்ட ஊடக எழுச்சியே என்பது இலக்கின் உறுதியான கருத்தாகவுள்ளது.
மேலும் சிறிலங்காவின் முன்னாள் படைத்தளபதி சரத் பொன்சேகா இசைப்பிரியாவை இனப்படுகொலை செய்தவர் யார் என்பதையும் வெள்ளைக்கொடியுடள் சரணடைந்தவர்களை இனப்படுகொலை செய்தது யார் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார். அவ்வாறு கிருசாந்தியை இனப்படுகொலை செய்தமைக்காகத் தண்டனை பெற்றவரே சந்திரிகா பண்டாரநாயக்கா மணியம் தோட்டத்துள் புதைத்தவர்களை அடையாளம் காட்ட வேண்டாமென்றதையும் குமார் பொன்னம்பலம் அவர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படுவதற்கு முதல்நாள் திகதியிட்டே சந்திரிகா அனுதாபக்கடிதம் அனுப்பியதையும் தான் சாட்சி சொல்ல ஆயத்தம் எனச் சத்தியக் கடுதாசி கொடுத்துள்ளார். இவைகள் எல்லாம் ஈழத்தமிழர்களால் அனைத்துலக மட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய தகவல்கள். இதற்கு ஈழத்தமிழர்களிடை ஒருமித்த செயற்பாடு வேகப்படல் அவசியம் என்பது இலக்கின் எண்ணம்.
போர் தொடரும் நிலையிலேயே இனி பொருளாதார முயற்சிகளின் வழியான ஆட்சிமுறைமைகள் தொடரப் போகின்றன. அதுவும் தன்னியக்க செயற்கை நுண்ணறிவு கருவிகள் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படும் போர்முறைகள் பெருவழக்காகும் இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழர்களிடை சிவில் சமுகங்களின் பெருக்கமும் அவற்றை நெறிப்படுத்தக்கூடிய ஆளுமையுள்ள இணைப்புக்களும் இன்றைய தேவையாகின்றன என்பதையும் ஈழத்தமிழர்கள் உணர்ந்து வேறுபாடுகள் உடன்பாடின்மைகளை பிரவினைகளாக்காது பலமான சிவில் சமுக குடையமைப்பொன்றை விரைவாகக் கட்டியெழுப்ப இலக்கு அழைக்கிறது.
ஆசிரியர்

Tamil News