வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றத் திட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டங்களை இந்த வருடத்தின் இறுதிக்குள் நிறைவு செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில், நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான பூர்வாங்கக் கலந்துரையாடல் நடைபெற்றது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின் போதே அதிகாரிகளால் வீட்டுத் திட்டச் செயன்முறை தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது. அதற்கமைய, இந்தியா மற்றும் சீனாவின் கடன் உதவியின் கீழ் செயல்படுத்தப்படும் வீட்டுத் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், கழிவு முகாமைத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பிலும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
அதற்கமைய, நீர் வழங்கல் மற்றும் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பில் அதிகாரிகளால், ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த காலங்களில் கைவிடப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிப்பது மற்றும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்களை விரைவில் நிறைவு செய்வது தொடர்பில் ஜனாதிபதியால் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.



