உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் கிறிஸ்துவ தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான ஒரு வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒக்டோபர் 14ஆம் திகதி நேரில் ஆஜராகவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேனவை தனிப்பட்ட வகையில் எதிராளியாகக் குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் கால் ஒன்றை இழந்த ஜேசுரான் கணேசன் மற்றும் அருட்தந்தை காமினி சிறில் ஆகியோர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையின் 298ஆம் பிரிவின் கீழ், மைத்திரபால சிறிசேனவை சந்தேக நபராக குறிப்பிட்டு, அவருக்கு அறிவித்தல் அனுப்புமாறு – முறைப்பாட்டாளர் தரப்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக, மேற்படி உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி – கிறிஸ்தவர்களின் புனித நாளான உயிர்த்த ஞாயிறு தினத்தில், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல்களில் 277 பேர் கொல்லப்பட்டதோடு, 400க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply