அனலைதீவு மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துதாருங்கள்: NPP பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை

அனலைதீவு மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துதாருங்கள் என்று  அனலைதீவு மக்கள் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள்.

தேசிய மக்கள் சக்தியின் யாழ் கிளிநொச்சி மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர்களான  வைத்தியர் சிறீபவானந்தராஜா மற்றும் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் ஆகியோர்  தீவக பகுதி மக்களை சந்தித்து அவர்களுடைய தேவைகள், மக்கள் பிரச்சினைகள்  ஆராய்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் அனலைதீவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது, அங்கு கூடியிருந்த மக்கள் தமது தேவைகள் குறித்து தெரிவித்தார்கள். குறிப்பாக, வீதிகள் புனரமைப்பு  செய்யப்பட வேண்டும் என்ற தமது நீண்ட கால கோரிக்கையை அவா்கள் மீண்டும் முன்வைத்தார்கள். இந்த விடயத்தில் அரசாங்கம் சாதகமாகச் செயற்படவில்லை என்பதையும் அவா்கள் சுட்டிக் காட்டினார்கள்.

அவரச நோயாளர்களை ஊர்காவற்றுறைக்கு கொண்டு செல்வதற்கு ஏற்ப அம்புலன்ஸ் படகு ஒன்றும் அனலைதீவுக்குத் தேவையுள்ளது. இதனையும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் தெரிவித்தார்கள்.

அனலைதீவில் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு ஓரேயொரு இ.போ.ச. வண்டியே இருக்கின்றது என்றும், அந்த பஸ் அடிக்கடி பழுதடைவதால் போக்குவரத்தை சீராக மேற்கொள்ள முடியாதுள்ளது என்றும் சுட்டிக்காட்டிய மக்கள், அதனை சீர்செய்து தரவேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்தாா்கள்.

மேலும் தமது பகுதியில் தானியங்கி வங்கி சேவைகள் (ATM) இல்லாதுள்ளது என்றும் தெரிவித்த அவா்கள், இதனையும் அமைத்து தருவதற்கு நடவடிக்கை எடுத்து தருமாறும் கேட்டுக்கொண்டாா்கள். வங்கிகள் இலாபத்துடன் இயங்கிவருகின்ற நிலையில், இதற்கான தேவை உள்ளதையும் அனலைதீவு மக்கள் கூட்டிக்காட்டினாா்கள்.

தமது தீவைப் பொறுத்தவரையில் அடிப்படை தேவைகள் பல நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத வண்ணமே உள்ளதாகவும் குறிப்பிட்ட மக்கள், எனவே அவற்றை தீர்ப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுத்து தாருங்கள் என்றும் கேட்டுக்கொண்டாா்கள்.

“கடந்த கால அரசாங்கங்கள் எம்மை தேடிவருவது சாத்தியமற்றதாகவே இருந்தது. தற்போது நீங்கள் எமது தேவைகளை அறிவதற்காக வந்துள்ளிர்கள். எனவே எமக்கு இவற்றை விரைவாக பெற்றுத்தர வேண்டும்” என்று அவா்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்தார்கள்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்கள் அனலைதீவு வைத்தியசாலைக்கும் விஜயம் மேற்கொண்டு மக்களின் சுகாதார நிலமைகள் வைத்தியசாலை தேவைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்கள். குறித்த தேவைகள் தொடர்பில் ஆராய்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவைகளை அறிந்து விரைவாக நிறைவேற்றகூடியவறறை உடனடியாக செயற்படுத்துவதாக தெரிவித்தார்கள்.

இந்த விஜயத்தில் தற்போது ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொதிகளும்  வழங்கிவைத்தாா்கள்.