தமிழ் தேசத்தினுடைய அரசியல் அபிலாஷைகளை பாதுகாப்பதற்கும், அந்த அரசியல் அபிலாஷைகளை முழுமையானதொரு அரசியல் தீர்வை வலியுறுத்துவதற்குமான கலந்துரையாடல் ஒன்று நேற்று (15) இடம்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அழைப்பின் பேரில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழர் தாயகத்தின் சிவில் சமூக அமைப்பினர் அரசியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இதில் பங்கேற்ற பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து ஒரு பொதுச்சபையை உருவாக்கியுள்ளதுடன், எதிர்காலத்தில் இணைய விரும்பும் ஏனைய தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க திம்பு கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய அரசியல் யோசனைகளைத் தயாரிப்பதற்காக ஒரு பிரத்யேகக் குழுவை நியமிக்க இக்கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன் நகர்வு தற்போதைய ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை நிராகரிக்கும் அதேவேளை, இப்பொதுச்சபையின் மூலம் எடுக்கப்படும் முடிவுகளே எதிர்கால அரசியல் நகர்வுகளைத் தீர்மானிக்கும் என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
வரவிருக்கும் வாரங்களில் இக்குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்றும், அதனுடைய பெயர் பட்டியல் இறுதிசெய்யப்படும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
இது தமிழ் மக்களின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



