டிட்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் தற்போதைய அவல நிலை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ்சை (Marc-André Franche), மலையக மீள்கட்டுமானத்திற்கான சிவில் சமூக கூட்டிணைவு நேரில் சந்தித்து விளக்கமளித்துள்ளது.
அரசு அறிவித்துள்ள நிவாரணங்களைப் பெற்றுக்கொள்வதில் மலையக மக்களுக்கு இழைக்கப்படும் பாரபட்சங்கள் குறித்து ஐ.நா பிரதிநிதியிடம் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் முறையான வீடமைப்பு மற்றும் காணி கொள்கை இல்லாமை, உட்கட்டமைப்பு சீரமைப்பில் நிலவும் தாமதம் போன்றவற்றால் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்தும் விளக்கப்பட்டது.
மீள்கட்டுமானப் பணிகளின் போது பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்கள் குறித்தும் விசேட கவனம் கோரப்பட்டுள்ளது.மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதியுடன் கூடிய காணி மற்றும் தனி வீடுகளைக் கொண்ட புதிய கிராமங்களை உருவாக்குவதே நிரந்தரத் தீர்வாகும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கைகளை அரசின் உயர்மட்டத்தினரிடம் கொண்டு செல்வதாக உறுதியளித்த மார்க் ஆண்ட்ரே பிராஞ்ச், கள நிலவரங்களை நேரில் கண்டறிய விரைவில் மலையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.



