உத்தேச தொழிலாளர் சட்ட மறுசீரமைப்பின் கீழ் பிரதானமாக நான்கு சட்டமூலங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராய்வு

உத்தேச தொழிலாளர் சட்ட மறுசீரமைப்பின் கீழ் பிரதானமாக நான்கு சட்டமூலங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாந்து தெரிவித்தார்.

தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கடந்த புதன்கிழமை (8) அதன் தலைவர் தொழில் அமைச்சர்  அனில் ஜயந்த பெர்னாந்து தலைமையில் கூடியபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இதில் தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்கவும் கலந்துகொண்டார்.

இங்கு விளக்கமளித்த அமைச்சின் செயலாளர், தற்பொழுது அதிகம் பயன்படுத்தப்படும் 14 தொழிலாளர் சட்டங்களையும் மறுசீரமைப்பது குறித்து ஆராய்வதற்காக 17 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்தக் குழு முதற்கட்டமாக கூடிக் கலந்துரையாடல்களை நடத்தியிருப்பதுடன், தொழிலாளர் தொடர்பில் பிரதானமாக 4 சட்டமூலங்களை தயாரிப்பதற்கு முதற்கட்டமாக இணக்கம் காணப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

தொழிற்சங்கங்கள், ஊழியம், தொழில் பாதுகாப்பு மற்றும் பணிநீக்கம் போன்ற நான்கு விடயங்களுக்கும் ஒவ்வொரு சட்டமூலங்களைத் தயாரிப்பதற்கு குறித்த குழுவில் இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

புதிய சட்டங்கள் இயற்றப்படும் வரை நடைமுறையில் உள்ள சட்டங்களில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பெண்கள் இரவு நேரங்களில் பணியாற்றுவது குறித்த சட்டம், தொழிலாளர் பாதுகாப்புச் ட்டம், தற்காலிகமாக வேலையிலிருந்து நிறுத்தப்படும்போதான காப்புறுதி தொடர்பான விடயங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்படவிருப்பதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், தொழில் பாதுகாப்புக் குறித்த தேசிய கொள்கைத் திட்டத்தைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்திருப்பதாகவும், விரைவில் இதனை வெளியிட எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியது.

அதேநேரம், தொழிலாளர் திணைக்களத்தின் தகவல் கட்டமைப்பைக் காலத்திற்கு ஏற்ற வகையில் புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், அரசாங்கத்தின் டிஜிட்டல்மயப்படுத்தல் திட்டத்தின் கீழ் தொழிலாளர் சக்திக்குள் நுழையும்போதே தொழிலாளர்கள் பற்றிய தகவல்களை இத்தகவல் கட்டமைப்புக்குள் உள்ளீடு செய்யும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.

உத்தேச தொழிலாளர் சட்ட மறுசீரமைப்புக் குறித்த வரைபுகள் தயாரிக்கப்பட்டதும் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் அது பற்றி விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டே இறுதி வரைபு தயாரிக்கப்படும் எனக் குழுவின் தலைவர் இங்கு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.