இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமரிடம், கச்சத்தீவை மீட்பது குறித்து கலந்துரையாட வேண்டுமென அவர் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கூட்டு பணிக்குழுவை மீண்டும் புதுப்பிப்பது தொடர்பாக இலங்கை பிரதமரிடம் வலியுறுத்துமாறும், கச்சத்தீவை மீட்பதோடு, கடற்றொழிலாளர்களின் உரிமையை மீட்டெடுப்பது பற்றி கலந்துரையாட வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தமிழக முதல்வர் சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள நிலையில், இன்று (16) இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பரஸ்பர நலன் சார்ந்த இருதரப்பு உறவுகள், பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமராகப் பதவியேற்ற பின்னர் ஹரிணி அமரசூரிய மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணம் இதுவாகும்.
இந்தப் பயணத்தின் போது அவர் முக்கிய இந்தியத் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.