இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக நினைத்து எதிர்ப்பினை தெரிவிக்க முன்வர வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி அமலராஜ் அமலநாயகி கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றினைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த கூட்டமானது, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில்சமூக அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், மத தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த விடயம் தொடர்பில் அமலராஜ் அமலநாயகி கருத்து தெரிவிக்கையில், “ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்படுவது சுதந்திர நாள் என்று ஆனால் அது தமிழர்களாகிய எங்களுக்கு ஒரு கரிநாள்” என்று தெரிவித்தார்.
எத்தனையோ ஆட்சிகள் மாறி வந்தாலும் தமிழர்களுக்கான நீதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
தங்களது உறவுகளை தொலைத்து விட்டு ஒவ்வொரு ஆட்சியாளர்களும் வந்து செல்வார்களே தவிர தாய்மாருக்கான எந்தவொரு நீதியும் இதுவரை கிடைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் காணாமல் ஆக்கப்பட்ட பிரச்சனைக்கு தற்போதைய புதிய அரசு கூட எந்த விதத்திலும் கவனம் செலுத்தவில்லை.
தற்போதைய ஜனாதிபதி தேர்தல் காலங்களில் பல்வேறு வாக்குறுதிகளை தெளித்து, ஆட்சிக்கு வந்திருந்தார்.
சுமூகமான ஒரு அரசியலாக பார்க்கின்றாரே தவிர பிரச்சனைகளுக்கு எந்தவொரு தீர்வு திட்டங்களும் இதுவரை இடம்பெறவில்லை.
அந்த வகையில், காணாமல் ஆக்கப்பட்ட விடயம் கூட அப்படி தான் போடப்பட்டிருக்கின்றது என்று மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி அமலராஜ் அமலநாயகி தெரிவித்துள்ளார்.



