வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு உடன் உதவக்கோரிக்கை

வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவின் காரணமாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு உடனடியாக உதவுமாறு கனேடியத் தமிழர் பேரவை அந்நாட்டு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கனேடியத் தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவின் காரணமாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு உடனடியாக உதவுமாறு கனேடிய அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். இவ்வனர்த்தத்தில் பெருமளவானோர் உயிரிழந்திருப்பதுடன் மேலும் பலர் தமது இருப்பிடங்களைவிட்டு தற்காலிக தங்குமிடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதுவரையான காலத்தில் இலங்கை முகங்கொடுத்திருக்கும் மிகமோசமான வெள்ளப்பெருக்கு இதுவென அனர்த்த முகாமைத்துவக் கண்காணிப்புக்கள் தெரிவித்துள்ளன. இதன் விளைவாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்களின் தீவிரத்தன்மையானது உடனடி சர்வதேச உதவிகளுக்கான தேவைப்பாட்டினை உணர்த்துகின்றன.

இந்த மிகமோசமான காலநிலையினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவும் உள்ளடங்குகின்றன. இந்த மாவட்டங்கள் வறிய மற்றும் பின்தங்கிய மாவட்டங்களாகவும் இருக்கின்றன.

அதேபோன்று அடிக்கடி அதிக மழைவீழ்ச்சி மற்றும் மண்சரிவு என்பவற்றுக்கு முகங்கொடுக்கும் மலையகமும் இவ்வனர்த்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட தரப்பினரைச் சென்றடைவதை உறுதிசெய்யக்கூடியவகையில் நம்பத்தகுந்த உள்நாட்டு மற்றும் சர்வதேச பங்காளிகள் ஊடாக தொடர் மனிதாபிமான உதவிகளை உடனடியாக வழங்குமாறு கனேடிய அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.