இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையைஅறிந்துகொள்வதை இலக்காகக்கொண்டு இயங்கிவரும் உறவுகள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிராகத் தொடர்ந்து ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டுவருவதாகத் தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் நடவடிக்கைக்குழு விசனம் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தொடரின் 3 ஆவது பக்க நிகழ்வாக ‘அபிவிருத்திக்கான உரிமை உள்ளடங்கலாக சகல மனித உரிமைகள், சிவில், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளைப் பாதுகாத்தலும் மேம்படுத்தலும்’ எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இக்கலந்துரையாடலை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் நடவடிக்கைக்குழுவினால் வலிந்து காணாமலாக்கப்படல்கள் விவகாரத்தின் உலகளாவிய நிலைவரம் குறித்து சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கை உள்ளடங்கலாக உலகநாடுகள் பலவற்றில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் விவகாரத்தின் மோசமான நிலைவரம் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தும், கரிசனைகளை வெளிப்படுத்தியும் தமக்குக் கடிதங்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அறிந்துகொள்வதை இலக்காகக்கொண்டு இயங்கிவரும் உறவுகள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிராகத் தொடர்ந்து ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டுவருவதாகத் தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்த தமது கரிசனையை தாம் அரசாங்கத்துக்குத் தெரியப்படுத்தியிருப்பதாகவும், நாட்டில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் பணியாற்றிவரும் ஏனைய மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மீது ஏற்பட்டிருக்கும் தாக்கங்கள் குறித்துத் தெளிவுபடுத்தியிருப்பதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.