தமிழரசு கட்சிக்கு பதில் கடிதம் அனுப்பிய ரெலோ

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அங்கத்துவ கட்சிகளுடன் கலந்தாலோசித்து இலங்கை தமிழரசு கட்சியுடன் ஒன்றிணைந்து பயணிப்பது சம்பந்தமான தீர்க்கமான முடிவை எட்டுவதற்கு தயாராகவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் இணைந்து செயற்படுவதற்கான விருப்பம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய ஏனைய கட்சிகளின் தலைவர்களுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

குறித்த கடிதத்துக்கு பதிலளித்து இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கு, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒன்றான எமது கட்சி பல்வேறு விதமான சவால்கள், விமர்சனங்கள், இடையூறுகள் எல்லாவற்றையும் கடந்து தமிழ் மக்களின் இன நலன் சார்ந்து ஒற்றுமையாகவும் பலமாகவும் அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என்பதில் பல விட்டுக் கொடுப்புக்களோடும் சகிப்புத்தன்மையோடும் பயணித்து வந்தது’ என்று அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘2023இல் அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக, வவுனியாவிலும் பின்னர் இறுதியாக மட்டக்களப்பிலும் எடுத்த ஏகோபித்த முடிவிற்கமைய தமிழ் அரசுக் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக தெரிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது’.

‘இதன்படி, எமது கட்சியான தமிழீழ விடுதலை இயக்கமும் தமிழ் மக்கள் விடுதலை கழகமும் அந்த சந்தர்ப்பத்தில், தேர்தல் நலன்கள், வெற்றி தோல்விகள், அதிகாரங்களை தக்க வைத்துக் கொள்ளல் என்பவற்றை கடந்து இன நலன் சார்ந்து ஒருமித்து பயணிக்க வேண்டிய கட்டாயத்தை தமிழரசு கட்சியின் தலைமையிடம் வலியுறுத்தியது’ என்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் மத்திய குழுவின் முடிவே இறுதியானது என்ற அடிப்படையில் உறுதியாக தனித்துப் போட்டியிடுவதென்ற முடிவை இலங்கை தமிழரசு கட்சி அறிவித்தாகவும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘இனப்பிரச்சினை தீர்வுக்கு முகம் கொடுத்திருக்கும் தமிழ் மக்கள் தேர்தல் நலன்களை மாத்திரம் முக்கியப்படுத்தும் இந்தப் பிரிவின் மூலம் எதிர்காலத்தில் பாரிய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதை தீர்க்கமாக எதிர்வு கூறியிருந்தோம்’.

‘இன்று அந்த நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டிருப்பதை நன்கு உணர்ந்து, இணைந்து செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்தி தாங்கள் முன்வைத்துள்ள அழைப்பை வரவேற்கிறோம்’ என்று இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கு, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.