யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளிலும் சீரான நடைமுறைகளைப் பின்பற்றி வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பனவு மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரதேச செயலாளர்களுடன் நிகழ்நிலையில் இடம்பெற்ற சந்திப்பின் போது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், வர்த்தமானி அறிவித்தலுக்கமைய அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களில் யாழ்ப்பாண மாவட்டமும் உள்ளடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் சுற்றறிக்கைகள் மற்றும் பாதீடு என்பவற்றுக்கமைய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், கிராம உத்தியோகத்தர்கள் மூலம் உரிய படிவத்தினை பூர்த்தி செய்தவர்களுக்குக் கொடுப்பனவை வழங்குவதற்கு கிராம உத்தியோகத்தர்களோ அல்லது பிரதேச செயலாளர்களோ காலநீடிப்பனை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், வீட்டு உரிமை அற்றவர்களுக்கும், தற்போது வசிக்கும் பிரிவுக்குரிய குடும்ப பதிவு அட்டை அற்றவர்களுக்கும் கிராம உத்தியோகத்தர்களின் பொருத்தமான உறுதிப்படுத்தலுடன் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு மற்றும் உலர் உணவுகள் வழங்குதலுக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களின் முதலாம் கட்ட பெயர்ப் பட்டியலை இன்று முதல் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தகுதியானவர்களின் பட்டியல்களைக் காட்சிப்படுத்திய பின்னர் காலதாமதமின்றி உரிய வங்கிக் கணக்கிற்கு கொடுப்பனவை விரைவாக வைப்பிலிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.



