யாழில் 36 வருட காலமாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணி விடுவிப்பு

யாழ்ப்பாணம், வசாவிளான் கிழக்கு பகுதியில் சுமார் 36 வருட காலமாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த 2 ஏக்கர் தனியார் காணிகள் இன்று உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளன.

ஒட்டகப்புலம் தேவாலயத்திற்கு அருகில் இராணுவப் பயன்பாட்டிற்காக கையகப்படுத்தப்பட்டிருந்த இந்தக் காணிகள், நீண்ட காலத்திற்குப் பிறகு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த காணிகளில் 234.8 ஏக்கர் நிலப்பரப்பு, கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதம் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விடுவிக்கப்பட்டது.

எஞ்சிய காணிகளையும் விரைவாக விடுவிப்பதாக அப்போது வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

அந்த வாக்குறுதி வழங்கப்பட்டு சுமார் 22 மாதங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது மேலதிகமாக இந்த 2 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 2 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டிருப்பதை வரவேற்றுள்ள அந்த பகுதி மக்கள், தேவாலயத்திற்கு அருகில் இன்னும் சில தனியார் காணிகள் இராணுவக் கட்டுப்பாட்டிலேயே இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எஞ்சியுள்ள அந்தக் காணிகளையும் எவ்வித தாமதமும் இன்றி விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.