அமெரிக்காவின் உதவிக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நன்றி தெரிவிப்பு

யாழ்ப்பாண விமான நிலையத்தில் அண்மையில் மனிதாபிமான உதவிகளை வழங்கிய அமெரிக்காவுக்கு பகிரங்கமாக நன்றி தெரிவித்ததுடன், தமிழ் மக்களின் இறைமையை மீட்டெடுக்க சர்வதேச நாடுகளின் ஆதரவையும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரியுள்ளனர்.

புத்தாண்டு தினமான நேற்று வவுனியாவில் 3,237வது நாளாகத் தொடரும் தங்களின் சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டத்தின் போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அந்த சங்கத்தின் உறுப்பினர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.

“காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் பிள்ளைகள் குறித்த உண்மையை வெளிப்படுத்த அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் முன்வர வேண்டும்” என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அத்துடன், தமிழ் மக்களின், இறைமையை மீட்டெடுக்க வலுவான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே, யாழ்ப்பாண விமான நிலையத்தில் இருமுறை பெரிய இராணுவ விமானங்கள் மூலம் அமெரிக்கா மனிதாபிமான உதவிகளை வழங்கியபோது, அதனை எந்தவொரு தமிழ் அரசியல் கட்சியோ அல்லது சிவில் அமைப்புகளோ அங்கீகரிக்கவோ அல்லது நன்றி தெரிவிக்கவோ இல்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தாங்கள் மட்டுமே அமெரிக்காவுக்கு நன்றியைத் தெரிவித்ததாகவும், இந்த மௌனம் தமிழர் மத்தியிலுள்ள அரசியல் தலைமைத்துவத்தின் தார்மீகத் தோல்வியையே அம்பலப்படுத்துகிறது எனவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்தனர்.

இதேவேளை, சிங்கள பௌத்த சின்னங்கள் தமிழர் தாயகத்தில் திணிக்கப்படுவதை விமர்சித்த அவர்கள், இலங்கைத் தீவில் தமிழர்களின் இருப்பு என்பது அனைத்து அரசியல் கட்டுமானங்களுக்கும் முந்தையது என்று குறிப்பிட்டனர்.

மகாவம்சத்தைக் காட்டி தமிழர் நிலங்களை உரிமை கோருவது வரலாற்று அடிப்படை அற்றது.
“வடக்கு – கிழக்கு என்பது அதன் வரலாறு மற்றும் கலாசாரத்தின் அடிப்படையில் தமிழ் தேசத்திற்கே சொந்தமானது” என்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்தனர்.