ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அதன் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை வலுப்படுத்துவதற்கும், வர்த்தக கம்பனிகள் மற்றும் தனவந்தர்களுக்கு ஆதரவாகவும், மறுபுறம் போதிய வருமானத்தை ஈட்டித்தராததுமான தற்போதைய வரிக்கட்டமைப்பில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
நாட்டின் செயற்திறனற்ற வரிக்கட்டமைப்பு மற்றும் கல்வித்துறைக்கான போதிய நிதி ஒதுக்கீடு இன்மை என்பன தொடர்பில் 101 பக்க விரிவான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், அதுகுறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
இலங்கையில் 2022ஆம் ஆண்டு உருவான தீவிர பொருளாதார நெருக்கடியில் நாட்டின் வரிக்கொள்கை மிக முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருந்ததுடன் கல்வி மற்றும் ஏனைய பொதுச்சேவைகளுக்கு அவசியமான நிதி ஒதுக்கீட்டில் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வழிகோலியது. இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அதன் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை வலுப்படுத்துவதற்கும், வர்த்தக கம்பனிகள் மற்றும் தனவந்தர்களுக்கு ஆதரவாகவும், மறுபுறம் போதிய வருமானத்தை ஈட்டித்தராததுமான தற்போதைய வரிக்கட்டமைப்பில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இலங்கை பல தசாப்தகாலமாக வருமானத்துக்காகக் காத்திருக்கவேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்திய பொருளாதாரக்கொள்கைகளின் பணயக்கைதியாக இருந்துவந்திருக்கிறது. அதனையடுத்து கல்வித்துறைக்கான செலவினங்களில் ஏற்பட்ட கணிசமானளவு வீழ்ச்சி, உலகளாவிய அரங்கில் இலங்கையின் கல்வி நிலைவரத்தைப் பின்னடையச்செய்தது.
இதுகுறித்து ஆராய்வதற்காக இலங்கையின் பொருளாதார நிலைவரம் மற்றும் அரச கல்விக் கட்டமைப்பின் பாதிக்கப்பட்டோர் உள்ளடங்கலாக 70க்கும் மேற்பட்டோரிடம் நேர்காணல்கள் நடாத்தப்பட்டன. அத்தோடு இலங்கையின் வரிக்கொள்கைகள் மற்றும் கல்வித்துறைக்கான செலவினங்கள் தொடர்பில் தரவு அடிப்படையிலான பரந்துபட்ட ஆய்வொன்றும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த கொள்கைசார் தோல்விகள் சிறுவர்களின் கல்விக்கான உரிமையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட நாடுகளில் கல்வித்துறையில் பெரிதும் முன்னேற்றமடைந்திருந்த நாடுகளில் ஒன்றாகத் திகழ்ந்த இலங்கையில் சுதந்திரத்தின் பின்னரான இரு தசாப்தங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 – 5 சதவீதமாகக் காணப்பட்ட கல்வித்துறைக்கான செலவினங்கள், கடந்த 2022ஆம் ஆண்டு 1.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அதேபோன்று 2022ஆம் ஆண்டு ஏப்ரலில் நாடு கடன்களை மீளச்செலுத்தமுடியாத வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படுவதற்கு குறைந்தளவு வரி வருமானமும் மிகமுக்கிய காரணமாக அமைந்தது. அதன்விளைவாக உருவான பொருளாதார நெருக்கடியை அடுத்து வேலை இழப்பு மற்றும் வருமான வீழ்ச்சி என்பன தீவிரமடைந்ததுடன் மனித உரிமைகளில் எதிர்மறைத்தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவகையில் வாழ்க்கைச்செலவு வெகுவாக அதிகரித்தது.
மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு பொருளாதார வளர்ச்சி மாத்திரம் போதுமானதன்று என்பதை இலங்கையின் பொருளாதார நிலைவரம் தெளிவாகப் புலப்படுத்துகிறது. இந்நிலையில் செயற்திறன்மிக்க வரிக்கட்டமைப்பு ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்துவதுடன் அவ்வருமானத்தை சகல இலங்கையர்களும் பயனடையக்கூடியவகையில் கல்வி மற்றும் ஏனைய அரசசேவை வழங்கலுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.