இலங்கையில் தற்போது நிலவுகின்ற தாழ் அமுக்கம் காரணமாக திருகோணாமலை மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தாழ் அமுக்கம் காரணமாக , மூதூர் பிரதேசத்தின் கரையோர பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
கடல் அலையின் கடும் வீரியம் காரணமாக, கரையோரங்களில் அமைந்திருந்த மீன்வாடிகள் மற்றும் கருவாடு உலர்த்த பயன்படுத்தப்பட்ட தட்டிகள் கடல் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கடல் அரிப்பு காரணமாக கரையோரத்தில் இருந்த மரங்கள் வேர் சாய்ந்து கடலுக்குள் விழுந்துள்ளன.
இந்த நிலைமையை கருத்தில் கொண்டு, மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு உயர்த்தி வைத்துள்ளனர்.
இது ஒவ்வொரு வருடமும் இதேபோன்று இடம்பெற்று வருவதால், உரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு கற்களை நிரப்பி தடுப்பு வேலி அமைப்பதன் மூலம் இந்த கடல் அரிப்பால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுக்க முடியும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.




