போதைப்பொருளுக்கு எதிராக மோதுவதற்கு தயார் – ஜனாதிபதி

நானும் எனது அரசாங்கமும் போதைப்பொருளுக்கு எதிராக மோதுவதற்கு தயார் என தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சிறைத்தண்டனை விதிக்கப்படுவோரில் 64 வீதமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் குறிப்பிட்டார்.

போதைப்பொருளுக்கு எதிரான ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய செயற்பாடு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் கொழும்பில் உள்ள சுகததாஸ உள்ளக அரங்கில் வியாழக்கிழமை (30) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இங்கு உரையாற்றும்போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் உரையாற்றுகையில்,

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க ஒரு வலுவான மக்கள் இயக்கம் உருவாக்கப்படும் என்றும், போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் தங்கள் சட்டவிரோத நடைமுறைகளை நிறுத்த அழைப்பு விடுக்கப்படும்.

அரசாங்கமும் பொலிஸ் திணைக்களமும் தனியாக போதைப்பொருளை தடுக்கும் செயற்பாட்டை முன்னெடுக்க முடியாது. அழிவுகரமான அச்சுறுத்தலை ஒழிப்பதில் அனைவரும் ஒன்றுபட வேண்டும். போதைப்பொருளுக்கு உதவும் பொலிஸார் விலகிக்கொள்ள வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவர்களை நாங்கள் விலக்குவோம்.

போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக பொலிஸ், இராணுவம், சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் புலனாய்வு சேவைகளை உள்ளடக்கிய ஒரு தேசிய செயற்பாட்டு மையம் நிறுவப்படும் என்றார்.