நல்லிணக்க பாலத்தை கட்டியெழுப்ப தயார்: ஐரோப்பிய ஒன்றியம்

நாட்டில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் நிறுவனங்கள், சமூகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு இடையிலான நல்லிணக்கப் பாலத்தைக் கட்டியெழுப்புவதற்கு இலங்கையில் சமூக ஒருமைப்பாட்டையும் சமாதானத்தையும் வலுப்படுத்தல் செயற்திட்டம் உதவியிருப்பதாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தூதுவர் கார்மென் மொரேனோ (Carmen Moreno) தெரிவித்துள்ளார்.

சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் இம்முயற்சியை ஆதரிப்பதில் தாம் பெருமையடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சமூக ஒருமைப்பாட்டையும் சமாதானத்தையும் வலுப்படுத்தல் செயற்திட்டத்தின் நிறைவு நிகழ்வு ‘ஒற்றுமையின் எதிரொலிகள்’ என்ற தலைப்பில் கொழும்பில் நடைபெற்றது.
இது இலங்கையில் சமூக ஒற்றுமையை மேம்படுத்தும் பொருட்டு மூன்றரை ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளின் இறுதிக்கட்டமாகும்.

இலங்கையின் சமூக ஒருமைப்பாட்டையும் சமாதானத்தையும் வலுப்படுத்தல் செயற்திட்டமானது 2022 முதல் 50 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் சிவில் சமூகப் பங்காளர்களுடன் பணியாற்றியுள்ளது.
இதற்கான செயற்பாடுகள் நாட்டின் 25 மாவட்டங்களிலும் 175,000 க்கும் மேற்பட்ட மக்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர், தமது தொடர் ஒத்துழைப்பை உறுதிப்படுத்தியதுடன் ‘திறந்த உரையாடல், நல்லிணக்கம் மற்றும் கடந்த காலங்களில் கற்றுக்கொண்ட பாடங்களுக்கு ஜேர்மனி மிகுந்த முக்கியத்துவம் வழங்குகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடித்தளமாகக்கொண்டு நேர்மையான பிரதிபலிப்பு, ஒத்துழைப்பு மற்றும் நீடித்த சமூக ஒற்றுமைக்கான அடித்தளங்களை எவ்வாறு கட்டியெழுப்ப முடியும் என்பதை இச்செயற்திட்டம் காண்பித்துள்ளது.

எனவே நிறுவனங்களை வலுப்படுத்தி, சமூகங்கள் ஒன்றாக முன்னேறுவதற்கு அதிகாரம் அளிக்கும் இவ்வாறானதொரு திட்டத்தை ஆதரித்ததையிட்டு பெருமையடைகின்றோம்’ என்றும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தூதுவர் கார்மென் மொரேனோ தெரிவித்துள்ளார்.