மகாவலி அதிகாரசபையின் ஆதரவுடனேயே வவுனியா வடக்கு, திரிவச்சகுளம் பகுதியில் பாரிய அளவில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் மகாவலி அதிகாரசபைக்கு மரணதண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் விவசாயம், கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால்காந்தவிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வவுனியா மாவட்டசெயலகத்தில் இடம்பெற்ற விவசாயம், கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சர் தலைமையிலான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திரிவச்சகுளம் பகுதியில் பெரும்பான்மை இனத்தவர்களால் சட்டவிரோதமாக பாரிய அளவில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டன. இலங்கையின் சட்டத்தின்படி காடுகளை அழிப்பதெனில் உரிய அனுமதிகளைப் பெறப்படவேண்டும். ஆனால். திரிவச்சகுளம் பகுதியில் அனுமதிகள் எவையும் பெறப்படாமல் 600ஏக்கருக்கும் மேற்பட்ட அடர்வனங்கள் அழிக்கப்பட்டன.
மகாவலி அதிகாரசபை தனது ஆளுகைக்குட்பட்ட இடம் என உரிமைகோரும் பகுதியிலேயே இவ்வாறு காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. மகாவலி அதிகாரசபையின் ஆதரவுடனேயே திரிவச்சகுளம் பகுதியில் இவ்வாறு அடர்வனங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.



