சடலங்களை புதைக்கலாம், ஆனால் ஒருகாலமும் உண்மைகளை புதைக்க முடியாது என்று இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோர் தரப்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இடம்பெற்ற செம்மணி நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைத்தப் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புதைக்கப்பட்ட என்புக் கூடுகளும் ஆன்மாக்களும் நிலத்தை கிழித்துக் கொண்டு உண்மைகளை உலகுக்கு சொல்ல வெளிவருவதாகவும் ரணிதா ஞானராஜ் இதன்போது கூறியுள்ளார். தமது அன்புக்குரியவர்களை தேடி அழைந்தது மாத்திரமின்றி, விசாரணைகள் மற்றும் சாட்சி பதிவுகள் என பல இடங்களுக்கு அழைந்து திரிந்து மக்கள் களைப்படைந்து விட்டதாகவும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி இதுவரை பெற்றுக் கொடுக்கப்படவில்லை என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
எனினும் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது? யாரால் நடத்தப்பட்டது? அவர்களின் பெயர் விபரங்கள், பதவி நிலை என அனைத்து விடயங்களையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நன்கறிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இறுதி யுத்தத்தின் போது இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்தவர்களும், சோதனை சாவடிகளில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களும் என பல்வேறு சந்தர்ப்பங்களில் இலட்சக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான புள்ளிவிபரங்கள் அனைத்தும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் சாட்சி பதிவுகளில் உள்ளதாகவும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகளில் மீட்கப்பட்டுள்ள என்புக்கூடுகள் தொடர்பான விசாரணைகள் மிகவும் தாமதமாகவே முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.