ஐக்கிய தேசிய கட்சியை புதிய தலைமுறையிடம் கையளிக்க தயார்: ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியை புதிய தலைமுறையினரிடம் கையளிக்கத் தயாராகி வருவதாக அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ‘Smart UNP’ டிஜிட்டல் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்நாட்டுப் போர் நிறைவடைந்த பின்னர் பிறந்த ‘Zen Beta’ தலைமுறை இளைஞர்களிடம் கட்சியினதும், தேசத்தினதும் பொறுப்புக்களை ஒப்படைக்க வேண்டிய காலம் கனிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு “எனக்கு இப்போது 70 வயதுக்கு மேல் ஆகிறது. இங்குள்ளவர்களில் பலருக்கு 70, 60 மற்றும் 50 வயதுக்கு மேல் ஆகிறது. இனிவரும் காலம் இளைஞர்களுக்கானது,” என அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க ‘Baby Boomers’ தலைமுறைக்காக நாட்டைத் தயார் செய்தார், ஜே.ஆர்.ஜயவர்தன மில்லினியல் (Millennials) தலைமுறையை உருவாக்கினார். அதேபோல், தான் இந்தப் புதிய தலைமுறையிடம் அதிகாரத்தை வழங்கத் தயாராக இருப்பதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய உலக ஒழுங்கு, சீனா மற்றும் இந்தியாவின் எழுச்சி போன்ற சர்வதேச சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வகையில் ‘ஸ்மார்ட்’ அரசியல் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual Reality) போன்ற தொழில்நுட்பங்களை அரசியல் களத்தில் பயன்படுத்த வேண்டும் என்று அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

கட்சியின் புதிய கட்டமைப்பிற்குள் ‘டிஜிட்டல் நிர்வாகி’ மற்றும் ‘டிஜிட்டல் அமைப்பாளர்கள்’ போன்ற பதவிகள் உருவாக்கப்படவுள்ளன.  அத்துடன், ஸ்டார்லிங்க் (Starlink) தொழில்நுட்பத்தின் ஊடாக அதிவேக இணையவசதிகள் மற்றும் டிஜிட்டல் உறுப்பினர் அட்டைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.