நாட்டில் பேரிடர் முகாமைத்துவ சட்டம் நடைமுறையில் இருக்கும் போது, அதைப் புறக்கணித்து ஒரு புதிய அமைப்பு அல்லது குழுவை உருவாக்குவது ஏன் என்ற தெளிவுப்படுத்தலை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கையை மீள் கட்டியெழுப்பும் திட்டம் தொடர்பிலும் ஆளும் தரப்புக்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. குறிப்பாக, இந்த திட்டத்திற்காக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நபர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள சட்டத்தை மீறி புதிய குழு அமைக்கும் தேவை ஆகியவற்றுக்கு எதிராகவே அதிக விமர்சனங்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார்.
பேரிடர் முகாமைத்துவத்தின் போது, பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவி மிகவும் முக்கியமானதாகும்.
இராணுவமும் பொலிஸாரும் பேரழிவு வேலைகளைப் பொறுப்பேற்று முன்னணியில் நின்று செயல்படுவார்கள்.
பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி மூலமாகவே அனைத்து நடவடிக்கைகளும் தொடர்புப்படுத்தப்படும். அதேபோல், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால், இதுபோன்ற அவசரச் சந்தர்ப்பங்களில் அனைத்து அமைச்சுகளின் செயலாளர்களையும் அழைத்து ஒருங்கிணைக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
ஒரு பேரிடர் ஏற்பட்டால், முதலில் பாதுகாப்புப் பேரவை கூடி ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து கலந்துரையாட வேண்டும். அதன்பிறகு அமைச்சரவை ஊடாக முடிவுகளை எடுக்க முடியும். பேரழிவு முகாமைத்துவக் குழுவும் சந்தித்து பேச வேண்டும். ஆனால் இன்று அவ்வாறானதொரு நிலைமை இல்லை. மறுபுறம் பேரழிவு முகாமைத்துவம் தொடர்பான ஒரு தேசியத் திட்டம் அரசாங்கத்திடம் இருந்தும், அது முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.



