தேசிய மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் ரணில் அனுமதி

கைது செய்யப்பட்டு விளக்கம் மாறியலில் வைக்கப்பட்ட நிலையில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய மருத்துவமைனக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவனையில் மருத்துவர்கள் இதற்கான பரிந்துரையை வழங்கினர். முன்னதாக அவரது நோய் நிலையை பரிசோதித்த சிறைச்சாலை மருத்துவர்கள் அவரை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றுமாறு பரிந்துரைத்திருந்தனர்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு காரணமாக முன்னாள் ஜனாதிபதியை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.  இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்த சிறைச்சாலை மருத்துவர்களும் அவருக்கு வீட்டு உணவை வழங்குமாறு பரிந்துரைத்திருந்தனர்.

அதன்படி, ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலையைக் கருத்திற் கொண்டு வீட்டிலிருந்து உணவு பெற அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பின்னணியில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.
அதேநேரம், இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்ட சம்பவம் நீதித்துறையில் முக்கிய நிகழ்வாக பதிவாகியுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட அவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் பயணத்தின் போது அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று மதியம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அவர் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டபோது கைது செய்யப்பட்டார்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக் காலத்தில், 2023 செப்டம்பர் 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க்கிற்குச் சென்றிருந்தார்.

சுற்றுப்பயணத்தை முடித்து நாட்டிற்குத் திரும்புவதற்கு முன்பு, முன்னாள் ஜனாதிபதி தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள லண்டன் சென்றிருந்தார்.

இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டன் (wolverhampton) பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜோன் ராஃப்டரி (John Raftery), லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகரகத்தின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பிதழை வழங்கியிருந்தார்.
இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட சுற்றுப்பயணத்தின் போது அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி நபரொருவர் சமீபத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, விசாரணை ஆரம்பிக்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்கவிடமும் தனிப்பட்ட உதவியாளர் சாண்ட்ரா பெரேராவிடமும் சமீபத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்கவை நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, அவர் நேற்று முற்பகல் 9 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்தார். சுமார் 4 மணி நேரம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிற்பகல் 1.15 அளவில் கைது செய்யப்பட்டார்.பின்னர் அவர் பிற்பகல் 3 மணியளவில் கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் அவர் பிரசன்னப்படுத்தப்பட்டார்.

இதன்போது, முறைப்பாட்டாளர் தரப்பு சார்பாக மேலதிக மன்றாடியார் திலீப பீரிஸ் விளக்கமளித்தார்.
இதன்படி, சந்தேகநபர் 2023 செப்டம்பர் 22ஆம் மற்றும் 23ஆம்திகதிகளில் பொது நிதியிலிருந்து 16.6 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி தனிப்பட்டவிஜயத்தில் ஈடுபட்டதாகக் மேலதிக மன்றாடியர் திலீப பீரிஸ் கூறினார்.

சுமார் 33 சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்றபிறகு, இந்த நாட்டின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கணிசமான ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2023 செப்டம்பர் 13ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை, சந்தேகநபர் கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதி செயலகம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உட்பட பத்து பேர் இந்த விஜயத்தில் பங்கேற்றனர்.

இருப்பினும், பின்னர் அவர் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் தனது மனைவியின் கௌரவ பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பிரித்தானியாவுக்கு சென்றார்.ஆரம்பத்தில் இந்த விஜயத்தை தனிப்பட்ட விஜயமாக விபரிக்கும் ஆவணங்கள் காணப்பட்ட போதிலும் பின்னர் அவை உத்தியோகபூர்வ விஜயமாக மாற்றப்பட்டுள்ளன.

இந்தநிலையில் யாரோ ஒருவர் பதிவுகளை மாற்றியமைத்ததாகக் கூறப்படுவதாகவும் மேலதிக மன்றாடியர் திலீப பீரிஸ் மன்றுரைத்தார். எனினும் விசாரணையில் குறித்த விஜயம் ஒரு தனிப்பட்ட விஜயம் என்று தெளிவாக தெரியவந்துள்ளது.

குறித்த பயணம் நிறைவடைந்ததன் பின்னரே, அதை ஒரு உத்தியோகபூர்வ விஜயமாக குறிப்பிட்டு ஆவணங்கள் மாற்றப்பட்டன.ஆவணங்கள் ஜோடிக்கப்பட்டவை என்பதை இது தெளிவாகக் குறிக்கிறது என்றும் மேலதிக மன்றாடியர் திலிப பீரிஸ் குறிப்பிட்டார்.

நாடு திவாலாகிவிட்டதாகக் கூறி பல அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்தேகநபர் இந்த விஜயத்தை மேற்கொண்டார்.
அவர் செலவிட்ட 16.6 மில்லியன் ரூபாய் பொது நிதியில் 4.5 மில்லியன் ரூபாய் வாகன வாடகைக்கு செலவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தால் 13.2 மில்லியன் ரூபாவும் இலங்கை பொலிஸ் மற்றும் கடற்படையால் 3.2 மில்லியன் ரூபாவும் இதற்காக வழங்கப்பட்டடுள்ளது என்றும் மேலதிக மன்றாடியர் திலீப பீரிஸ் மன்றுரைத்தார்.
அத்துடன் பிணையை எதிர்த்து வாதிட்ட மேலதிக மன்றாடியர் திலீப பீரிஸ், சந்தேகநபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் வருவதாகவும், எனவே பிணை வழங்கச் சிறப்புக் காரணங்கள் தேவை என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில் சந்தேகநபரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன முன்னிலையாகி பிணை கோரி மனுவை தாக்கல் செய்தார். தற்போதைய ஜனாதிபதியின் செயலாளர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டது என்று குறிப்பிட்ட அவர், இது போன்ற வழக்குகள் இவ்வாறான முறையில் தாக்கல் செய்யப்படக் கூடாது என்று வாதிட்டார்.
‘சந்தேக நபர் 76 வயதானவர், நீண்ட விமானப் பயணங்களைத் தாங்க முடியாது. அதனால் தான் இங்கிலாந்து ஒரு போக்குவரத்து மையமாகப் பயன்படுத்தப்பட்டது. அவர் ஏழு ஆண்டுகளாக இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார், நீரிழிவுநோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பல நோய்களால் அவதிப்பட்டு வருகிறார்’ என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன மன்றுரைத்தார்.

‘அவரது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. அவர்கள் இருவர் மட்டுமே, அவருடைய அனைத்து தேவைகளையும் தமது சேவை பெறுநரே கவனித்துக்கொள்கிறார்’.
‘அத்துடன் இந்தியாவில் நடைபெறும் பொதுநலவாய இளைஞர் உச்சி மாநாட்டில் அவர் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார்’.

‘முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைச்சாலை பாதுகாப்பான இடம் அல்ல’. எனவே, தமது சேவை பெறுநரை பொருத்தமான நிபந்தனைகளின் கீழ் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு பிரதிவாதி தரப்பு ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன கோரிக்கை விடுத்தார். இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்து தீர்ப்பை அறிவித்த நீதவான் நிலுபுலி லங்காபுர, பிரதிவாதி தரப்பின் பிணை கோரிக்கையை நிராகரித்தார். 1982ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க பொதுச் சொத்துசட்டத்தின் 5ன் கீழ் 1 என்ற சரத்துக்கு அமைய, இந்த குற்றம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது என்றும் நீதவான் தமது தீர்ப்பில் அறிவித்தார்.

குறித்த சுற்றுப் பயணத்துக்காக பிரதிவாதி அரச நிதியை பயன்படுத்தியமையை அவரது தரப்பு சட்டத்தரணிகள் நிராகரிக்கவில்லை. எனவே, உத்தியோகபூர்வ விஜயமொன்றின் போது கவனத்திற் கொள்ளப்படும் விடயங்கள், இந்த விடயத்தில் கவனத்திற் கொள்ளப்படமாட்டாது.

அதேநேரம், பிரதிவாதியின் உடல்நிலை இந்த வழக்குக்கு பொருத்தமான காரணமாகவும் கொள்ளப்படாது.
அத்துடன் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே அடிப்படை சட்டமாக உள்ளமையால், சந்தேகநபர் இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்பதை இவ்வாறான வழக்கில் கவனத்திற் கொள்ள முடியாது என்றும் நீதவான் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த பட்டமளிப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்து 2023 செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த கடிதம் சரியானதா? என்பது தொடர்பில் விசாரணை நடத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, சந்தேகநபரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைத்து நீதவான் உத்தரவிட்டார். இந்தநிலையில் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் விளக்கமறியல் சிறைச்சாலையில் அவர் தடுத்து வைக்கப்பட்டார். பின்னர் அவரது மருத்துவர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய, அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் தற்போது அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உயர் குருதிஅழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் என்பன இருப்பதாகவும் இது தொடர்பில் மருத்துவர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்தார்.