யாழ்ப்பாணத்திலுள்ள உணவகமொன்றில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சம்பந்தப்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ள சி.சி.ரி.வி காணொளிகளை கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
‘இரண்டு தரப்பினரிடம் இருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை ஆரம்பிப்பதற்காக குறித்த சி.சி.ரி.வி காணொளி காட்சிகள் பயன்படுத்தப்படும்’என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறுகையில், ‘நேற்றிரவு விருந்தகம் ஒன்றில் தாமும் தமது பிரத்தியேக செயலாளரும் உணவருந்திக் கொண்டிருந்தபோது, இருவர் தம்முடன் முரண்பட்டதாக’ தெரிவித்தார்.
‘தையிட்டி விகாரை இடிக்கப்படக்கூடாது என தாம் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த இருவரும் தம்முடன் முரண்பட்டதாகவும் அதனை காணொளியாக பதிவுசெய்ய முற்பட்டபோது, அவர்கள் தம்மை தாக்கியதாகவும்’ அவர் குறிப்பிட்டார்.
‘தற்பாதுகாப்புக்காக தாமும் அவர்களில் ஒருவரை தாக்கியதாக’ பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். இதேவேளை, ‘குறித்த சம்பவத்தில் தாம் தாக்கப்பட்டதாக தெரிவித்து ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தகம் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தமக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக, தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் நபர் முறைப்பாடளித்துள்ளார்’ என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, ‘பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் தாக்கப்பட்டதாகக் கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபருக்கு நெற்றிப் பகுதியில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்’ என்றும் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் ‘இரு தரப்பிலும் முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு நீதிமன்றில் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்படும்’ என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை குறித்த தாக்குதல் சம்பவத்துக்கு மன்னிப்பு கோருவதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தமது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



