மலையகம் கல்வித்துறையில் உரிய இலக்குகளை இன்னும் அடையாத நிலையில் இதற்கென பகீரதப் பிரயத்தனத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது.எனினும் கல்வித்துறை அபிவிருத்திக்கு தடையாக பல காரணிகள் காணப்படும் நிலையில் போஷாக்கின்மை நிலை அண்மைக்காலமாக ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
போஷாக்கின்மை காரணமாக பல சிறுவர்கள் கல்வித்துறையில் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் போஷாக்கு மேம்பாடு தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டிய ஒரு தேவை இப்போது மேலெழுந்துள்ளது.
கலாச்சாரத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பயனுள்ள விடயங்களை சமூகத்துக்கு பெற்றுக் கொடுப்பது கல்வி என்று கல்விக்கு வரைவிலக்கணம் கூறுவார்கள்.மனிதன் ஒரு சமூக விலங்கு .விலங்கு மனதின் வலியொன்றை மனிதனிடம் காண முடியும்.எனவே அதன் ஆதிக்கத்தில் இருந்து மனித மனத்தை விடுவிப்பதே கல்வியின் பணி என்கிறார் சிரேஷ்ட விரிவுரையாளர் அனுஷ்யா சத்தியசீலன்.
மேலும் கல்வி என்பது மனிதனின் விலங்கியல் இயல்பூக்கத்தை மாற்றியமைப்பதாகும்.மனிதம் மறுக்கப்பட்டு மனிதனால் உருவாக்கப்படும் பொருட்கள் இன்று முக்கியத்துவம் பெற்று வருகின்றன.எதிர்கால மனித செயற்பாடுகள் யாவும் பெருமளவில் இயந்திரங்களையே சார்ந்ததாகி விடும்.இதனால் மனிதம் சார்ந்த பண்புகள் மேலும் சரியத் தொடங்கும்.இவற்றையெல்லாம் நாம் சந்திக்காமல் இருக்க வேண்டுமானால் கல்வி தன் கடமையை அவசரமாக நிறைவேற்ற தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அனுஷ்யா தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்..
இந்த வகையில் கல்வி தொடர்பான சிந்தனைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் பூரணத்துவம் மிக்க கல்வியினை பெற்றுக் கொள்வதென்பது பல சமூகத்தவர்களுக்கு சவாலான ஒரு விடயமாக உள்ளது.இதில் பின்தங்கிய சமூகங்கள் கூடுதலான நெருக்கீடுகளை எதிர்கொள்வதும் தெரிந்ததேயாகும்.இதனிடைய மலையக சமூகத்தின் கல்வி நிலைமைகள் தொடர்பாக நாம் நோக்குகின்றபோது ஆரம்ப காலத்தில் இச்சமூகத்தினரின் கல்வி விடயங்களில் தோட்ட நிர்வாகங்கள் கவனம் செலுத்தவில்லை என்பது யாவரும் அறிந்தவொரு விடயமாகும்.
“தோட்ட முகாமையாளர்கள் தொழிலாளர்களின் கல்வியில் அக்கறை காட்டவில்லை என்பது மாத்திரமல்ல.தொழிலாளர்களின் பிள்ளைகள் எவ்வித எழுத்தறிவையும் பெற்றுக் கொள்ளக் கூடாது என்பதிலும் அவர்கள் உறுதியாக இருந்தனர்.இதில் எவ்விதமான ஆச்சரியமும் இல்லை.பெருந்தோட்ட கலாசாரத்தில் கல்வி என்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.தொழிலாளர் கல்வியை பெற்றுக் கொண்டால் தோட்டங்களின் மனிதவலு வளங்களில் பாதிப்பு ஏற்படும்.
எனவே தொழிலாளர்களின் பிள்ளைகள் எவ்வித கல்வியையும் பெற்றுக் கொள்ளக் கூடாது என்பதில் தோட்ட நிர்வாகிகள் மிகவும் கவனமாக இருந்தனர்” என்று பேராசிரியர் தை.தனராஜ் தனது நூலொன்றில் சுட்டிக்காட்டி இருப்பதிலிருந்து பெருந்தோட்ட மக்கள் மீதான கல்வி ஒடுக்குமுறை வெளிச்சத்துக்கு வருகின்றது.இந்த ஒடுக்குமுறை கல்வித்துறையில் மட்டுமல்லாமல் ஏனைய பல துறைகளிலும் எதிரொலித்தமையும் தெரிந்த விடயமாகும்.
இந்த வகையில் கடந்த கால மலையக கல்வி அடைவுகளை பார்க்கும்போது எம்மால் திருப்திகொள்ள முடியவில்லை.இலங்கை பெருந்தோட்டப் பகுதிகளில் 1953 – 1988 வரையான கல்வி நிலைமைகள் குறித்து நோக்குகையில் அது பின்வருமாறு அமைந்திருந்ததைக் காணலாம்.
இதனடிப்படையில் 1953 இல் பெருந்தோட்டப் பகுதிகளில் எழுத்தறிவற்றோர் வீதம் 61 ஆக காணப்பட்டது.முதல் நிலைக்கல்வி மட்டும் பெற்றோர் 36 வீதமாகவும, இரண்டாம் நிலை வரை கல்வி பெற்றோர் மூன்று வீதமாகவும் காணப்பட்டனர்.இதேவேளை 1963, 1973, 1978/79, 1981/82, 1985/86, 1988 ம் ஆண்டுகளில் முறையே 57, 52, 45, 46, 41, 32 வீதமானோர் தோட்டப் பகுதிகளில் எழுத்தறிவற்றோராக காணப்பட்டனர்.இதேவேளை மேற்படி ஆண்டுகளில் முறையே 35, 42, 48, 45, 43, 53 வீதமானோர்முதல் நிலை கல்வி மட்டுமே பெற்றவர்களாகக் காணப்பட்டனர்.
அத்தோடு மேற்படி ஆண்டுகளில் முறையே 8, 6, 7, 8.5, 14, 15 வீதமானோர் பெருந்தோட்ட பகுதிகளில் இரண்டாம் நிலை வரை கல்வி பெற்றோராக இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.இந்நிலையில் கல்வி கற்காத இளைஞர்கள் முதியோர் கல்வியில் ஆர்வம் செலுத்த வேண்டும் என்று அப்போது புத்திஜீவிகளால் ஒரு கோரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
விசேடமாக மேலதிக நிதி
இதேவேளை 2016 ம் ஆண்டு தகவலொன்றின்படி இலங்கையின் துறைவகைப்படி கணினி அறிவும், எண்ம அறிவும் தொடர்பில் நோக்குகையில் நகர்ப்புறத்தில் கணினித் திறன் 41.10 வீதமாகவும், எண்மத்திறன் 54.50 வீதமாகவும் காணப்பட்டது.கிராமப் புறத்தில் இது முறையே 36.50, 34.40 வீதமாக இருந்தது.
அதேவேளை, பெருந்தோட்டங்களில் கணினித் திறன் 09.50 வீதமாகவும, எண்மத்திறன் 16.40 வீதமாகவும இருந்தமை தெரிந்ததேயாகும்.2012/2013 தகவலின்படி இலங்கை மக்களின் கல்வி மட்டங்களை நோக்குகையில் அது பின்வருமாறு அமைந்திருந்தது.
இதற்கேற்ப பாடசாலைக்கு செல்லாதோர் நகர்ப்புறத்தில் 2.2 வீதமாகவும், கிராமப்புறத்தில் 3.5 வீதமாகவும், பெருந்தோட்டங்களில் 12.2 வீதமாகவும் காணப்பட்ட நிலையில் தேசியளவில் பாடசாலைக்கு செல்லாதோர் வீதமானது 3.7 ஆகக் காணப்பட்டது.
இதேவேளை நகர்ப்புறத்தில் 5 ஆம் தரம் வரை கல்வி கற்றோர் 19.2 வீதமாகவும், 6 – 10 வரை கல்வி கற்றோர் 39.8 வீதமாகவும், கல்வி.பொ.த.சாதாரணதரம் வரை கல்வி கற்றோர் 18.2 வீதமாகவும் ,கல்வி.பொ.த.உயர்தரம் வரை கல்வி கற்றோர் 20.5 வீதமாகவும் காணப்பட்டனர்.இதேவேளை மேற்கண்ட பல நிலைகளிலும் பெருந்தோட்ட மக்கள் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களைக் காட்டிலும் வீழ்ச்சி நிலையை சந்தித்திருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
இதற்கேற்ப 2012/13 ம் ஆண்டுகளில் பெருந்தோட்டப் பகுதிகளில் 5 ஆம் தரம் வரை கல்வி கற்றோர் 42 வீதமாகவும், 6 – 10 வரை கல்வி கற்றோர் 38.07 வீதமாகவும், கல்வி.பொ.த. சாதாரண தரம் வரை கல்வி கற்றோர் 4.09 வீதமாகவும், கல்வி.பொ.த உயர்தரம் வரை கல்வி கற்றோர் 2.2 வீதமாகவும் காணப்பட்டனர்.
இத்தகவல்கலுக்கமைய பெருந்தோட்டப் பகுதிகளில் பாடசாலை செல்லாதோர் நகரம் மற்றும் கிராமத்தைக் காட்டிலும் 4 – 6 மடங்கு அதிகமாகுமென்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மேலும் பெருந்தோட்டப் பகுதிகளில் க .பொ.த. உயர் தரம் மற்றும் அதற்கு மேலே கல்வி பயின்றவர்கள் பல மடங்கு குறைவாக உள்ளனர்.தேசிய சராசரியோடு ஒப்பிடுகையில் பெருந்தோட்டப் பகுதி மக்களின் கல்வி மட்டங்களில் வீழ்ச்சி நிலை காணப்படுகின்றது போன்ற விடயங்களும் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளன.
இந்நிலையில் பெருந்தோட்ட கல்வி அபிவிருத்தி தொடர்பாக சில பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.இதற்கேற்ப இலங்கை அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்த ஆலோசனைகள் தேசிய ரீதியாக அமைவதோடு கிராமங்கள், தோட்டப் புறங்களுக்கான விசேட ஏற்பாடுகளையும் கொண்டிருக்க வேண்டும்.தொலைநோக்கு 2025 எனப்படும் கொள்கை அறிக்கை, அறிவுப் பொருளாதாரத்துக்கான கல்விச் சீர்திருத்தங்களில் கிராமப்புறங்களை உள்ளடக்குவது பற்றி குறிப்பிடுகின்றது.இலங்கையானது நகர்ப்புறம்,கிராமப்புறம், பெருந்தோட்டம் என்று அரசாங்க ஆவணங்களில் ஆராயப்படுவதும் தரவுகள் வகைப்படுத்தப்படுவதுமே வழமையாகும்.இதனை சகல கொள்கை ஆவணங்களும் பின்பற்ற வேண்டும்.
பெருந்தோட்டப் பகுதிகளில் இடைவிலகல் தன்மை சமகாலத்திலும் முன்னதாகவும் அதிகமாகவே இருந்து வருகின்றது.இத்தகைய ஒரு சூழ்நிலையில் இடைவிலகலைக் கட்டுப்படுத்த ஒரு வழி முன்னதாகவே அவ்வாறு இடை விலகக்கூடிய மாணவர்களை இனங்காணுதலாகும்.இதற்கு மாணவர் வருகை, கல்விச் சித்தி, கல்விச் செயற்பாடுகளில் பங்கேற்பு, முதலியவற்றை இனங்காணுதலாகும்.இவற்றின் அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னதாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.மேலும் பின்தங்கிய சமூகங்களை சேர்ந்த பிள்ளைகளை ஏற்றுக் கொள்ளும் பாடசாலைகளுக்கு விசேடமாக மேலதிக நிதி வசதிகளையும் பௌதீக , மனித வளங்கையும் வழங்குதல் வேண்டும்.பிரசித்தி பெற்ற சிறந்த பாடசாலைகளை சகலரும் நாடிச் செல்வர்.எனவே அங்கு பலதரப்பட்ட சமூகப் பிரிவினருக்கும் இடமளிக்கும் ஏற்பாடுகள் அவசியமாகும் என்ற பரிந்துரைகளும் இடம்பெற்றிருந்தன!
மலையகக் கல்வி என்பது இன்னும் பல வெற்றிப் படிகளையும் தாண்டி உச்சத்தைத் தொட வேண்டிய நிலையில் உள்ளது.எனினும் கஷ்ட மற்றும் அதிகஷ்டப் பிரதேச நிலைமைகள், போக்குவரத்து சீர்கேடு, பௌதீக மற்றும் மனித வளப்பற்றாக்குறை, அரசியல் ரீதியான இடையூறுகள் எனப்பலவும் மலையக கல்வி அபிவிருத்திக்கு சவாலாக விளங்குகின்றன.இதனிடையே ஏற்கனவே முடக்க நிலையில் இருந்த போஷாக்குக் குறைபாடு அண்மைக்கால பொருளாதார நெருக்கடியின் காரணமாக மேலும் உக்கிரமடைந்துள்ளது.
மலையக மாணவர்கள் இதில் அதிகமாகவே பாதிப்பினை எதிர்கொண்டுள்ளமை புதிய விடயமல்ல.இலங்கையில் கடந்த 2021 ம் ஆண்டில் 12.2 வீதமாகக் காணப்பட்ட எடை குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை 2022 ம் ஆண்டில் 15.3 வீதமாக அதிகரித்துள்ளதாக யுனிசெப் அமைப்பின் கடந்த ஆண்டுக்கான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மேலும் தமது பிள்ளைகளுக்கு அவசியமான உணவை வழங்குவதில் பெருமளவான குடும்பங்கள் சிரமங்களுக்கு முகம் கொடுத்திருந்ததுடன் , பொதுப் போக்குவரத்து சேவை குறைபாட்டின் விளைவாக சிறுவர்களால் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.
இவ்வாறான நடவடிக்கைகள் சிறுவர் தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வழிகோலியதுடன் அவர்களின் பாதுகாப்பையும் கேள்விக்கு உட்படுத்தியது. இதேவேளை கடந்த 2022 ம் ஆண்டு செப்டம்பர் மாதமளவில் நாட்டின் மொத்த சனத்தொகையில் 28 சதவீதமானோர் அதாவது 6.2 மில்லியன் பேர் ஓரளவு உணவுப் பாதுகாப்பின்மைக்கும், 66 ஆயிரம் பேர் தீவிர உணவுப் பாதுகாப்பின்மைக்கும் முகம் கொடுத்திருப்பதாகவும் யுனிசெப்பின் அறிக்கை தெளிவுபடுத்துகின்றது.
இந்நிலையில் இலங்கையில் குறைந்தபட்சம் 6.3 மில்லியன் மக்கள் தீவிர உணவுப் பாதுகாப்பின்மை நிலைக்கு முகம் கொடுத்திருப்பதாகவும், அவசியமான உயிர் காக்கும் உதவிகள் மற்றும் வாழ்வாதார உதவிகள் என்பன வழங்கப்படாவிட்டால் 2023 இல் அவர்களின் நிலைமை மேலும் மோசமடையும் என்றும் செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கங்களின் சர்வதேச கூட்டிணைவு இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளமையும் நோக்கத்தக்கதாகும்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்ட தாக்கங்கள் இன்னமும் உயர்வாக உள்ளதோடு இந்நெருக்கடி உடனடியாக சீரடையப் போவதில்லை என்றும் அச்சங்கங்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.எவ்வாறெனினும் இலங்கையின் பொருளாதாரம் உள்ளிட்ட பல்துறைசார் நெருக்கடிகளால் மலையக சமூகத்தினர் எதிர்கொள்ளும் பாதிப்பே அதிகமாக உள்ளது.குறிப்பாக வருமானப் பற்றாக்குறை இவர்களின் வாழ்வாதாரம், உணவுப் பாதுகாப்பு என்பவற்றை மழுங்கடித்துவரும் நிலையில் சிறுவர்கள் உள்ளிட்டோரின் போஷாக்குணவு அல்லது நிறையுணவும் கேள்விக்குறியாகியுள்ளது.
இதனால் பாடசாலை சிறுவர்கள் கல்வி நிலைமைகளில் பின்னடைவு கண்டு வருகின்றனர்.கல்வி மையச் சமூகமாக உருவெடுக்க வேண்டிய மலையக சமூகத்துக்கு போஷாக்கின்மை என்பது ஒரு சாபக்கேடேயாகும்.இந்நிலையில் மலையக சிறுவர்கள் உள்ளிட்டோரின் போஷாக்கு மேம்பாடு கருதி விசேட திட்டங்களை மேற்கொள்ள அரசும், அரசுசார்பற்ற நிறுவனங்களும் முன்வருவது அவசியமாகும்.