தமிழீழ வைப்பகத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகள் குறித்து கேள்வி

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் காலங்களில் தற்போதைய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்பில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

தேர்தல்கள் நடைபெற்று ஓராண்டுகள் கடந்தும் ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் உள்ள தமிழ் மக்களுக்கு எந்த மகிழ்ச்சியான செய்தியும் இதுவரை கிடைக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.

”இறுதி யுத்தத்தின் போது தமிழீழ வைப்பகத்தில் நகை அடகு வைத்தவர்களின் நகைகளை பெறமுடியவில்லை. கடந்த 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்ற தேர்தல் காலங்களில் அரசாங்கத்தாலும் அதன் உறுப்பினர்களாலும் தமிழீழ வைப்பகத்தில் வைக்கப்பட்ட நகைகளை திருப்பி ஒப்படைப்போம் என பகிரங்கமாக தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் இது குறித்து எந்த மகிழ்ச்சியான செய்தியும் இதுவரை கிடைக்கவில்லை” என்று சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டார்.  பொருளாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் மனநிலையை இந்த அரசு கரிசனையுடன் அக்கறை கொள்ளுமா? என்று அவர் கேள்வியெழுப்பினார்.

தமது நகைகளுக்காக காத்திருக்கும் மக்களின் நகைகள் எப்போது மீண்டும் ஒப்படைக்கப்படும் என்றும் இது குறித்து ஏதேனும் ஒரு வேலைத்திட்டம் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளதா? என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேள்வியெழுப்பினார்.