இருக்கிற எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தவே மீண்டும் QR!

இருக்கிற எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தவே QR மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரின் தலைமையிலான நேற்று (15)   மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகத்தில் தற்போது அசாதாரண நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. மத்திய கிழக்கின் போர் நிலைமை காரணமாக தற்போது ஈரான் வாழ்வா சாவா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. ஈரானில் உள்ள எண்ணெய் குதங்கள் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றன,

இதனால் உலகில் எண்ணெய் விலை கடுகதி வேகத்தில் உயர்ந்து செல்கிறது. 68 டொலராக இருந்த எண்ணெய் விலை தற்போது 100 டொலருக்கும் அதிகமாகி உள்ளது. இதனால், சுவிஸ், அமெரிக்கா, கனடா பிரான்ஸ் என எல்லா நாடுகளிலும் எரிபொருள் விலையேற்றம் காணப்படுகிறது.

இலங்கையை பொறுத்த வரைக்கும், மே மாதம் வரைக்கும் தேவையான எரிபொருளே உள்ளது. எரிவாயும் அப்படித்தான்.

எமது நாட்டை பொறுத்த வரைக்கும் எரிபொருளை களஞ்சியபடுத்த போதிய அளவு களஞ்சிய வசதிகள். இல்லை. 38 நாட்களுக்கு மேல் களஞ்சியப்படுத்தி வைக்க முடியாத நிலைமையே காணப்படுகிறது,

கடத்த கால ஆட்சியாளர்கள் நாட்டை நாசமாக்கி உள்ளனர். அவர்களால் எரிபொருள் உள்ளிட்டவற்றை களஞ்சிய படுத்தி வைக்க கூடிய பெரியளவிலான களஞ்சிய சாலைகளை கூட அமைக்க முடியவில்லை. அவர்களின் தோல்வியே இன்று நாட்டு மக்களை வாட்டுகின்றது.

தற்போது மே மாதம் வரைக்குமான எரிபொருள் கையிருப்பில் உள்ளமையால் அவற்றை சிக்கனமாக பயன்படுத்தவே QR பொறிமுறையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம்.

கடற்தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு, அவர்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல பொருட்களை ஏற்றி இறக்கும் வாகனங்களுக்கும் தேவையான எரிபொருளை விநியோகிக்க விசேட நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என தெரிவித்தார்.