பிராந்தியத்தில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலை காரணமாகச் சிக்கித் தவிக்கும் பயணிகளின் வசதிக்காக, ஓமானின் மஸ்கட் மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத் நகரங்களிலிருந்து விசேட நிவாரண விமான சேவைகளை முன்னெடுக்க கட்டார் ஏர்வேஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இந்த நிவாரண விமான சேவைகள் இன்று (05) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்த விமான நிறுவனம் தனது ‘X’ தளத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி, மஸ்கட்டிலிருந்து லண்டன், பெர்லின், கோபன்ஹேகன் போன்ற பல ஐரோப்பிய நகரங்களுக்கும், ரியாதிலிருந்து பிராங்பேர்ட் நகருக்கும் இந்த விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கட்டார் நாட்டின் வான்பரப்பு தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதன் காரணமாக, தோஹாவில் உள்ள ஹமாட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஆரம்பமாகவிருந்த சாதாரண விமான சேவைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளால் வான்பரப்பு பாதுகாப்பானது என உறுதிப்படுத்தப்படும் வரை தோஹா விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட மாட்டாது எனவும் அந்நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது.
எனவே, குறித்த விமானப் பயணங்கள் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைக்கும் வரை விமான நிலையத்திற்கு வருகை தர வேண்டாம் எனவும் பயணிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



