புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலம் தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு நீதி அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார கோரியுள்ளார்.
புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலம் தொடர்பாக ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
“தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, ஏற்கனவே உள்ள பயங்கரவாதச் சட்டத்தை இரத்து செய்து, மனித உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலத்தை இயற்றுவதாக நாங்கள் உறுதியளித்தோம்.
அதன்படி, பழைய சட்டத்தை இரத்து செய்து பயங்கரவாதம் குறித்த புதிய சட்டத்தை வரைவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி ஹர்சகுலரத்ன தலைமையில் 17 பேர் கொண்ட அறிஞர்கள் குழு நியமிக்கப்பட்டது.
அந்தக் குழு பதினொரு மாத காலப்பகுதியில் மூன்று மொழிகளிலும் சட்டமூலத்தை வரைந்து வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது இப்போது நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இது நாட்டிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மிகவும் நுட்பமான மற்றும் உணர்திறன் மிக்க சட்டமூலம் என்பதால், அமைச்சரவை அல்லது பாராளுமன்றத்தில் நேரடியாக சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பு பொதுமக்களுக்கு அதன் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்று நம்புகிறோம்” என்று அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அதன்படி, வரைவு ஏற்கனவே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
வரைவு சட்டமூலம் தொடர்பில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வரை தெரிவிக்கலாம் என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.



