தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த அகதிகள் மீளவும் நாட்டுக்கு வரவேண்டும் என்பதே எங்களின் விருப்பமாகவும் இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்
UNHCR அமைப்பின் தேசிய அலுவலகத் தலைவராகப் பணியாற்றிய சஞ்சிதா சத்தியமூர்த்தி, வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய நிலையில் அவர் இதனை தெரிவித்தார்
கடந்த காலங்களில் வடக்கு மக்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை UNHCR அமைப்பு வழங்கியதை நினைவுகூர்ந்த ஆளுநர், அதற்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
குறிப்பாக இந்தியாவின் தமிழக மாநிலத்தில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் மற்றும் அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டதில் UNHCR அமைப்பின் பங்கு அளப்பரியது என்பதையும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் காணி இல்லாதவர்களுக்கு காணி வழங்குதல், வீடமைப்புத் திட்டம், வாழ்வாதார உதவி மற்றும் வேலை வாய்ப்பு என்பனவற்றை உறுதிப்படுத்தி தமிழகத்தில் தற்போதும் தங்கியுள்ள இலங்கை அகதிகளை மீள நாட்டுக்கு அழைத்து வருவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்திய ஆளுநர், அதற்குரிய திட்டங்களை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் இதற்கான ஒத்துழைப்புக்களை எதிர்பார்ப்பதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்