வெடுக்குநாறிமலை கைதை எதிர்த்து இன்று போராட்டம் – நெடுங்கேணி சந்தியில் நடத்த ஏற்பாடு

வெடுக்குநாறிமலை ஆலயப்பூசகர் உள்ளிட்ட 8 பேரை விடுவிக்கக் கோரி இன்று வெள்ளிக்கிழமை நெடுங்கேணிச் சந்தியில் போராட்டம் ஒன்றை நடத்த வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பரிபாலன சபை அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்-

08.03.2024 அன்று எமது ஆலய வளாகத்தில், சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த எமது ஆலயத்தின் பரிபாலன சபையின் நிர்வாகிகள் மீதும், சிவ பக்தர்கள் மீதும் பொலிஸார் நடத்திய வன்முறைகளை எதிர்த்தும், கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள சிவபக்தர்களை விடுவிக்கக் கோரியும் பாரியளவிலான வெகுஜனப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளோம். இன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு நெடுங்கேணி சந்தியில் ஆரம்பிக்கும் இந்தப் போராட்டமானது, வவுனியா வடக்கு பிரதேச செயலகம் வரை பேரணியாகச் சென்று,
இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி மற்றும் இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுக்கான மகஜர் கையளிக்கப்படும்.

அரச அநீதிக்கு எதிரான இந்தப் போராட்டத்தில், அனைத்துத் தமிழ் மக்களையும், சமயம் சார்ந்த அமைப்புக்களையும், தமிழ் அரசியல்வாதிகளையும், தமிழ் உணர்வாளர்களையும், சிவில் சமூகத்தினரையும், பல்கலைக்கழக மாணவர்களையும், ஊடகங்களையும் கலந்து கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்” என்றுள்ளது.