நேபாளத்தில் இடம்பெற்றுவரும் போராட்டங்களுக்கு மத்தியில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலக வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வருகிறது.
அரசாங்கத்தின் சர்வாதிகார அணுகுமுறையை எதிர்த்து போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் பிரதமர் கே.பி. சர்மா ஒலி இராஜினாமா செய்யும் வரை தாங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் கூறி வருகின்றனர். ஜெனரல்-இசட் நடத்திய சமூக ஊடக ஆதரவு போராட்டம் தற்போது ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு பெரிய காரணமாக மாறியுள்ளது.
பிரதமர் கே.பி. சர்மா ஒலி சமூக ஊடகங்கள் மீதான தடையை திரும்பப் பெற்றுள்ள நிலையில், பரவலான ஊழல் காரணமாக போராட்டக்காரர்கள் தற்போது அவரது இராஜினாமாவைக் கோருகின்றனர். குறிப்பாக, பல்வேறு அமைச்சர்களின் மகன்கள் மற்றும் மகள்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் நேபாளத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கு அமைச்சர்களின் குடும்பங்கள் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கும் அதேவேளையில், சாதாரண நேபாள குடிமக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தக்கூட போராடுகிறார்கள் என இளைஞர்கள் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.