.யாழ்ப்பாணம் – அன்னசந்திர வீதியில் அமைந்துள்ள தொடருந்துக் கடவை ஊடான போக்குவரத்துப் பாதை மூடப்பட்டதைக் கண்டித்து, அந்த பகுதி மக்கள் நேற்று (22) பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
நீண்டகாலமாகப் பயன்பாட்டிலிருந்த இந்தப் பாதை திடீரென மூடப்பட்டதால், பொதுமக்களின் அன்றாடப் போக்குவரத்து நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகப் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
குறிப்பாக, நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துவது மேலதிக தூரத்தையும் செலவையும் ஏற்படுத்துவதாக அவர்கள் கவலை வெளியிட்டனர்.
பதாகைகளை ஏந்தியவாறு, தொடருந்துக் கடவைக்கு முன்பாகக் திரண்ட பொதுமக்கள் கோஷங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தின் போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தமக்கான முறையான போக்குவரத்துத் தீர்வை அதிகாரிகள் உடனடியாக வழங்க வேண்டும் என்பதே மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.



