சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) மற்றும் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (PSTA) ஆகியவற்றை உடனடியாக மீளப் பெறக்கோரி கொழும்பில் உள்ள நீதி அமைச்சிற்கு முன்பாக இன்று பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சிவில் அமைப்புகள், பல்வேறு மதங்களைச் சேர்ந்த மதத் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரும் ஒன்றிணைந்து முன்னெடுத்த இந்தப் போராட்டத்தின் போது, “அடக்குமுறைச் சட்டங்கள் ஜனநாயகத்தின் எதிரிகள்” என்றும், “மக்களை ஒடுக்கும் எந்தவொரு சட்டமூலமும் நாட்டிற்குத் தேவையில்லை” என்றும் போராட்டக்காரர்கள் மும்மொழிகளிலும் முழக்கமிட்டனர்.



