யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவனுக்கு நீதி வேண்டி ஊர்காவற்றுறை பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கடந்த பெப்ரவரி மாதம் அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான 17 வயதான சிறுவனுக்கு நீதி கோரி இன்று (10) ஊர்காவற்றுறை காவல்நிலையம் முன்பாக போராட்டம் இடம்பெற்றது.
மனித உரிமை ஆர்வலர் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தின் போது சிறுவனின் உறவுகள் மற்றும் ஏனையோர் கலந்துகொண்டு, காவல்துறையினருக்கு எதிரான கோசங்கள் எழுதிய பதாகைகளை தாங்கியிருந்தனர்.
குறித்த போராட்டம் ஊர்காவற்றுறை நீதிமன்றின் முன்பாக முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமான நிலையில், நீதிமன்ற காவல்துறையினரால் நீதுமன்றுக்கு முன்பாக போராட்டம் நடத்த முடியாது எனக் கூறி நீதிமன்ற வளாகத்தை கடந்து போராட்டத்தை முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்ற மக்கள் பின்பு ஊர்காவற்றுறை காவல் நிலையம் முன்பாக ஒன்றுகூடி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரின் செயலைக் கண்டித்து பல்வேறு சுலோங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கி, கோசமிட்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.



