பௌத்த தர்மம், பௌத்த சாசனம் மற்றும் மகாசங்கத்தை பாதுகாப்பது இனவாத செயல் அல்ல என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது, இலங்கையில் பெரும்பான்மையான மக்கள் பௌத்த மதத்தவர்கள் என்பதால், புத்த மத கலாசாரம் மற்றும் தத்துவத்தை பாதுகாப்பது நாட்டிலுள்ள அனைத்து மதங்களுக்கும் நன்மை பயக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த நாடு பௌத்த மத அடித்தளத்தில் உருவானது என தான் நம்புவுதாகவும், பௌத்த மதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடு, அனைத்து மதங்களையும் பாதுகாக்க முடியும் எனவும் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
“என் மதத்தில் நம்பிக்கை வைத்திருப்பதாலேயே என் கலாசாரத்தை பாதுகாக்க முடிந்தது. மதத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள், மற்றொருவரின் மொழி, மதம் அல்லது கலாசாரத்தை பாதுகாக்க முடியாது,” என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.



