வரிச்சுமைக்கு எதிராக இன்று முதல் கறுப்பு மாதம் பிரகடனம்

இன்று(01) முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை தொடர்ச்சியாக ஆர்ப்பாட்ட மாதமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அகில இலங்கை சுகாதார தொழிற்சங்க சங்கங்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

மருந்து தட்டுப்பாடு, வரி அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு ஆகிவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த போராட்ட மாதம் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை சுகாதார தொழிற்சங்க சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர்  கருத்து தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அனைத்து வைத்தியசாலைகளுக்கும் முன்பாக மதிய போசன நேரத்தில் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்தின் முறையற்ற வரி விதிப்பு காரணமாக வைத்தியர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வருடத்தின் ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்துக்கும் அதிகமான வைத்தியர்கள் தொழில் நிமித்தம் வௌிநாடுகளுக்கு சென்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் ஐம்பதுக்கும் அதிகமான மின் பொறியியலாளர்கள் தொழில் நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக மின் பொறியலாளர் சங்கத்தின் இணைச்செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன தெரிவித்துள்ளார்.