வெளிநாட்டு ஆய்வு கப்பல்களை கையாளும் நடைமுறை விரைவில் நிறைவு

வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்களைக் கையாள்வதற்கான நடைமுறை தரத்தை இலங்கை, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்யும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சீன ஆராய்ச்சி கப்பல்கள் நாட்டின் கடல் எல்லைக்குள் வருவதை அமெரிக்காவும், இந்தியாவும் கடந்த காலங்களில் கடுமையாக ஆட்சேபித்தன.

இதனையடுத்து, வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்களைக் கையாள்வதற்கான நடைமுறையை திட்டமிடுவதற்கு இலங்கை கடந்த ஆண்டு ஒரு குழுவை நியமித்திருந்தது. எனினும், இதுவரை அந்தக் குழுவின் பணிகள் உறுதி செய்யப்படவில்லை என்று அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள், இந்த நடவடிக்கை இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனா தொடர்பான பூகோள அரசியல் பிரச்சினைகள் காரணமாக, வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்களை நாட்டின் கடல் எல்லைக்குள் அனுமதிப்பதில் இலங்கை இராஜதந்திர சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.