மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி காரணமாக இலங்கையில் இன்று (23) நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்களின் விலைகள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, டீசல் விலை லீற்றருக்கு 382 ரூபாவாக அதிகரித்ததைத் தொடர்ந்து, பஸ் கட்டணங்களை 12.19 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதன்படி, 27 ரூபாவாகக் காணப்பட்ட ஆகக்குறைந்த பஸ் கட்டணம் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 30 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய கட்டணப் பிரிவுகளும் விகிதாசார அடிப்படையில் உயர்த்தப்பட்டுள்ளன.
இதேவேளை, எரிபொருள் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வைக் கருத்திற்கொண்டு பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் அறிவிப்பின்படி, ஒரு இறாத்தல் பாணின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய பேக்கரி பண்டங்களின் விலைகளும் தலா 10 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளன.
இந்த விலை உயர்வுடன் இணையாக கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் 20 சதவீதத்தினாலும், முச்சக்கர வண்டி மற்றும் பாடசாலை வேன் சேவைக் கட்டணங்களும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.



