‘ஜனாதிபதியின் வடக்கு மாகாண விஜயத்தின்போது, அங்குள்ள மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும்’ என்று போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்ட அவர் அங்கு செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, ‘எதிர்வரும் 31 ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திலும் பங்கேற்பார்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘வட மாகாண மக்கள் தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்தமைக்கு மதிப்பளிக்கும் வகையில் ஜனாதிபதியின் இந்த விஜயம் அமைகிறது’ என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ‘கடந்த கால அரசாங்கங்கள் தேர்தல்களை பிற்போட்டிருந்தன’. ‘தற்போது, உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பான சட்டதிருத்தம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘தற்போது, நீதிமன்றங்களில் சில மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன’.’எனினும் அவற்றினால் தேர்தலுக்கு எந்த பாதிப்பு ஏற்படாது’ என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், ‘ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் அல்லது நான்காம் வாரத்தில் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்குமென எதிர்பார்ப்பதாகவும்’ அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை முடிவுறுத்தியுள்ளதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதற்கமைய, உயர்நீதிமன்றின் இரகசிய வியாக்கியானம் ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு அனுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



