மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவிக்கின்றார்.
பாராளுமன்றத்திற்கு இன்று (03) விஜயம் செய்து, சபையில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
அதன்படி, உலக அமைதிக்கு அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அதன்படி, உலக பொருளாதாரத்திற்கும், மக்களின் வாழ்க்கைக்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய நிலை உருவாகியுள்ளதாக ஜனாதிபதி அச்சம் வெளியிட்டுள்ளார்.
இந்த அச்சுறுத்தல் நிலையிலிருந்து, தனித்துச் செயற்படுவதற்கு இலங்கைக்கு இயலுமை கிடையாது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். எனினும், இலங்கைக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களிலிருந்து விடுபடுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாடுகளுடன் இணைந்து, சமாதானத்திற்கான அர்ப்பணிப்புகளை மேற்கொள்வதற்கு இலங்கையும் கடமைப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையால், நாட்டில் உருவாக்கப்படும் செயற்கை தட்டுப்பாடுகள் தொடர்பிலும் ஜனாதிபதி தனது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.



