ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எமது கோரிக்கைக்கு அமைவாக மாகாண சபைகளை மையப்படுத்திய இடைக்கால நிருவாக முறைமையையே செயற்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இதனடிப்படையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்திக்கச் செல்வதோடு தமிழரசுக்கட்சியும் எமது கோரிக்கையுடன் விரைவில் இணைந்து கொள்ளும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதிக்குள்ள மாகாண சபைகளை மையப்படுத்திய இடைக்கால பொறிமுறை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு, கிழக்கை மையப்படுத்தி தமிழ்த் தேசியக் கட்சிகள் 13 காணப்படுகின்றன. இதில் கஜேந்திரகுமார் தலைமையிலான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸைத் தவிர ஏனைய கட்சிகள் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளன.
அந்த அடிப்படையில் தற்போதுமாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாமையால் நாம் மாகாணங்களுக்கான இடைக்கால நிர்வாகமுறைமையொன்றை உருவாக்குவதற்குரிய பரிந்துரையொன்றை முன்னெடுத்திருந்தோம்.
இறுதியாக நடைபெற்ற சந்திப்பின்போது அந்த விடயம் சம்பந்தமாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய போது எமது கோரிக்கைகளை சாதகமாக பரிசீலிப்பதாக அவர் கூறியிருந்தார்.
அத்துடன், ஜனாதிபதியுடனான இறுதிச் சந்திப்பின்போது அவர் (ஜனாதிபதி) புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படமாட்டாது என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தார். அவரிடத்தில் உள்ள அதிகாரங்களுக்கு அமைவாக மாகாண சபைபனை இயங்கச் செய்டவதற்காக் கூறியிருந்தார். அதனைத் தான் தற்போது தமிழரசுக்கட்சியுடனான சந்திப்பின்போதும் ஜனாதிபதி கூறியிருக்கின்றார். ஆகவே அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
எம்மைப்பொறுத்தவரையில், நாம் 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள குறைப்பாடுகளை ஓரளவு நிவர்த்திசெய்யும் வகையிலான வரைவொன்றை தயாரித்து ஜனாதிபதியிடத்தில் கையளித்துள்ளோம். அதனை அவர் சாதகமாக பரிசீலிக்கின்றார். எம்முடனும் பேச்சக்களை முன்னெடுக்கின்றார். அவ்வாறான நிலையில் தான் அவர் இந்தியாவுக்குச் செல்கின்றார். இந்தியா நீண்டகாலமாகவே 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.
அதனடிப்படையில் எமது பரிந்துரைகள் அடங்கிய விடயத்தினை மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் வரையில் தற்காலிகமாக முன்னெடுக்கப்போவதாக ஜனாதிபதி ரணில் தனது விஜயத்தின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடத்தில் தெரிவிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. குறித்த கோரிக்கையை முன்வைப்பதற்கு முன்னதாக நாம் தமிழரசுக்கட்சி உட்பட ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ உள்ளிட்ட கட்சிகளுடன் கலந்துரையாடல்களைச் செய்தோம்.
ஏனென்றால் இந்தக்கட்சிகள் அனைத்துமே 13ஆவது திருத்தச்சட்டத்தினைக் முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரியுள்ளன. இதற்காக பிரதமர் மோடிக்கும் கடிதங்களை அனுப்பியுள்ளன. எனினும், இந்தக்கட்சிகள் எமது ஆவணத்தில் கையொப்பமிடவில்லை. அதற்கான காரணம் எமக்குத் தெரியாது. எம்மைப்பொறுத்தவரையில், எதிர்வரும் காலத்தில் தமிழரசுகட்சியும் எமது விடயத்தில் பங்கெடுக்கும் நிலைமை ஏற்படும்.
அவர்களால் அதனை தவிர்த்துச் செல்ல முடியாது. ஏனைய தரப்புக்களும் அதில் கலந்து கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.